உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி., கூட்டத்தில் பங்கேற்க எம்.பி., ரஷீதுக்கு அனுமதி

பார்லி., கூட்டத்தில் பங்கேற்க எம்.பி., ரஷீதுக்கு அனுமதி

புதுடில்லி : பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள எம்.பி., அப்துல் ரஷீத் ஷேக், தற்போது நடக்கும் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க டில்லி உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அப்துல் ரஷீத், 2017ல் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பொறியாளரும், அவாமி இதிஹாத் கட்சித் தலைவருமான இவர், 2019 முதல் திஹார் சிறையில் உள்ளார். அங்கிருந்தபடியே, கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் ரஷீத் போட்டியிட்டார். தற்போதைய முதல்வர் ஒமர் அப்துல்லாவை தோற்கடித்தார்.இந்நிலையில், பார்லிமென்ட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, இடைக்கால ஜாமின் வழங்கக் கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இம்மாதம் 26 முதல் ஏப்., 4 வரை பார்லி., கூட்டத்தொடரில் பங்கேற்க ரஷீதுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பார்லிமென்ட் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்படும் ரஷீத், அவர்களின் பாதுகாப்பில் கூட்டத்தொடரில் பங்கேற்பார். இந்த சமயத்தில் தொலைபேசி உட்பட எந்தவித தொலை தொடர்பு சாதனங்களையும் அவர் பயன்படுத்தக் கூடாது. இண்டர் நெட் பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது. பார்லிமென்ட் வளாகம் தவிர வெளியில் யாருடனும் பேச அனுமதியில்லை. ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது. பயணம் மற்றும் பிற ஏற்பாடுகளுக்கான செலவுகளை ரஷீத் ஏற்க வேண்டும். நீதிமன்றத்தின் நெறிமுறைகளை அவர் முறையாக பின்பற்றுவதை லோக்சபா பொதுச்செயலர் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

vinoth kumar
மார் 27, 2025 02:09

சிறையில் உள்ள ஒரு குற்றவாளி தேர்தலில் நிற்க முடியுமா ? இது என்ன இந்திய தேர்தல் நடைமுறை என்று புரியலை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை