மும்பை தாதா சோட்டா ராஜனின் ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு
மும்பை, மும்பையில், 2001ல் ஹோட்டல் உரிமையாளரை கொலை செய்த வழக்கில், தாதா சோட்டா ராஜனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், அவருக்கு இந்த வழக்கில் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ஜெயா ஷெட்டி. இவர் கடந்த 2001ல் மும்பையில் நான்கு ஹோட்டல்களை நடத்தி வந்தார். அப்போது இவரிடம் பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளியான சோட்டா ராஜனின் ஆட்கள், பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2001 மே மாதம் தன் ஹோட்டலின் முதல் மாடியில் இருந்த ஜெயா ஷெட்டியை இரண்டு பேர் சுட்டு கொன்றனர். இந்த வழக்கில் சோட்டா ராஜனும் சேர்க்கப்பட்டு, மஹாராஷ்டிரா குற்றத்தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. கடந்த மே மாதம் சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சோட்டா ராஜன் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சோட்டா ராஜனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்தனர். மேலும், இந்த வழக்கில் அவருக்கு இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கினர். இருப்பினும் சோட்டா ராஜனுக்கு எதிராக ஏராளமான வழக்குகள் இருப்பதால், அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார் என அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.