உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் ரூ.474 கோடிக்கு காப்பீடு

மும்பை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் ரூ.474 கோடிக்கு காப்பீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக மும்பையின் ஜி.எஸ்.பி., சேவா மண்டல், 474.46 கோடி ரூபாயை காப்பீடு செய்துள்ளது. மும்பையின் ஜி.எஸ்.பி., சேவா மண்டல் எனும், 'கவுட் சரஸ்வத் பிராமன் சேவா மண்டல்' அமைப்பு, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதற்காக கடந்த 1951ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அமைப்பு, விநாயகர் சதுர்த்திக்கு பிரமாண்ட விநாயகர் சிலைகள் மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்களை பயன்படுத்துவது வழக்கம். ஜி.எஸ்.பி., சேவா மண்டல் சார்பில் மும்பை சியோனில் உள்ள கிங்ஸ் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள், வரும் 27ம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடக்க உள்ளன. இதற்காக, 69 கிலோவிற்கும் அதிகமாக தங்கம் மற்றும் 336 கிலோவிற்கும் அதிகமான வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட பிற விலைமதிப்பற்ற பொருட்களால் விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட உள்ளதாக, இந்த அமைப்பின் தலைவர் அமித் பாய் தெரிவித்துள்ளார். இந்த கொண்டாட்டங்களுக்காக, 474.46 கோடி ரூபாய் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு 400.58 கோடி ரூபாயாக இருந்தது. மொத்த காப்பீட்டில், தங்கம், வெள்ளி மற்றும் பிற நகைகளுக்கு 67.03 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தன்னார்வலர்கள், சமையல்காரர்கள், பூசாரிகள், காலணி விற்பனை ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்காக, 375 கோடி ரூபாய் தனிப்பட்ட விபத்து காப்பீடு போடப்பட்டுள்ளது. பந்தல்கள், அரங்கங்கள் மற்றும் பக்தர்களை உள்ளடக்கிய பொது காப்பீட்டுக்காக, 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும் இடத்துக்கு, 43 லட்சம் ரூபாய் மற்றும் தளவாடங்கள், கணினிகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்ட பிற பொருட்களுக்கு, 2 கோடி ரூபாய் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக -அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலையின் மதிப்புமிக்க ஆபரணங்களின் மதிப்பு உயர்ந்து வருவதும், விழாவில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் இந்த அதிக காப்பீட்டு தொகைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை