UPDATED : ஜூலை 21, 2025 07:53 AM | ADDED : ஜூலை 20, 2025 11:52 PM
பெங்களூரு: பெங்களூரு போக்குவரத்து நெரிசல் தொடர்பாக சமூக வலைதளத்தில் இளம் பெண்கள் குமுறலுடன் பதிவிட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக தலைநகர் பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் என்பது சர்வ சாதாரணம். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக செல்ல வேண்டும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது.இந்நிலையில், பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் அன்றாடம் பொதுமக்கள் எப்படி சிக்கி திணறி வருகின்றனர் என்பதை சமூக வலைதள பிரபலங்களான பிரியங்கா மற்றும் இந்திராணி என்ற இளம் பெண்கள், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.'எங்கள் தோழியை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறக்கிவிட்டு, வீடு திரும்பினோம். விமானத்தில் சென்ற தோழி, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் தரையிறங்கிவிட்டார். ஆனால், நாங்கள் இன்னும் டிராபிக்கில் சிக்கி விழி பிதுங்கி நிற்கிறோம்' என, குறிப்பிட்டு உள்ளனர்.அவர்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவு நகைச்சுவையாக இருந்தாலும், சிந்திக்கவும் வைத்திருக்கிறது. அவரைப் போலவே தாங்களும் இதுபோன்ற அனுபவத்தை சந்தித்ததாக பலரும் பதிவிட்டுள்ளனர்.