தங்கவயலில் மாயமான தமிழ் பள்ளிகள்
தங்கவயல் ; தமிழ் வாழ்ந்த, தமிழரை தரமான கல்வியறிவுடன் திகழ வைத்த, தங்கவயல் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களே இல்லாத நிலை காணப்படுகிறது.கர்நாடகாவில் தமிழர்கள் நிறைந்த, குட்டித் தமிழகம் என்றெல்லாம் பேசப்பட்ட நகரம் கே.ஜி.எப்., எனும் கோலார் கோல்டு பீல்டு. இங்கு குடியிருப்புப் பகுதிகள் தோறும் தமிழ்ப் பள்ளிகள் இருந்தன.இப்படி நுாற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளில், தமிழ் மொழியை தமிழர்கள் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், உருது, ராஜஸ்தானி ஆகிய மொழிகளை தாய் மொழியாகக் கொண்டவர்களும் முதல் மொழியாக தமிழில் படித்தனர். இது, தங்கவயலில் மறுக்கப்படாத உண்மை.தமிழை எழுதப் படிக்க தெரியாதவர்கள் யாருமே இல்லை என்ற பெருமை, தங்கவயலில் நிலவிய காலம் இருந்தது. நுாற்றுக்கும் அதிகமான தமிழ்ப் பள்ளிகள் இருந்த இடத்தில், தற்போது பள்ளிகள் இருக்கின்றனவா எனத்தேட வேண்டியுள்ளது.முழுக்க முழுக்க தமிழரே நிறைந்திருந்த பல பகுதிகளில் தமிழ்ப் பள்ளியே இல்லை என்ற அவல நிலை, தங்கச்சுரங்க குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ளது.சீதா தமிழ் அரசு ஆரம்பப் பள்ளி: தமிழ் ஆர்வலர்கள் நிறைந்த இடமான, என்.டி.பிளாக் பகுதியில் நுாற்றாண்டு பழமையான சீதா பள்ளி எனும் அரசு தமிழ் ஆரம்பப் பள்ளி இருந்தது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை நடத்தப்பட்டது. இப்பள்ளியில் தமிழை முதல் மொழியாக கொண்டு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். இவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆசிரியர் - ஆசிரியைகள் 10 பேர் இருந்தனர்.தமிழில் படித்த பலர் மருத்துவர்கள், பொறியாளர்கள், உயர் அதிகாரிகளாக இருந்துள்ளனர். இத்தகைய தமிழ்ப் பள்ளியில், ஒரு மாணவர் கூட இல்லாததால், 2019ல் மூடப்பட்டது. இதில் இரண்டு வகுப்பறைகள் அங்கன்வாடி மையமாக ஆக்கப்பட்டுள்ளது.டன்லப் தமிழ் அரசு ஆரம்பப் பள்ளி: உரிகம் என்.டி.பிளாக் எலக்ட்ரிக்கல் காலனியில் டன்லப் தமிழ் அரசு ஆரம்பப் பள்ளி இருந்தது. இங்கு 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை இருந்தது. இது 80 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு 400 மாணவர்கள் தமிழில் கல்வி பயின்றனர். மாணவர்கள் எண்ணிக்கை குறைய குறைய இப்பள்ளி, பத்து ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. பள்ளியின் ஒரு கட்டடம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது; மற்றொரு கட்டடம் அங்கன்வாடி மையமாக உள்ளது.எம்.இ.எல்.ஐ.எம்., தமிழ் ஆரம்பப் பள்ளி: தங்கவயலில் தமிழ்ப் பள்ளி இருக்கிறது என்று அடையாளம் காட்டுவதற்காக உரிகம் ஈ.டி.பிளாக் எனும் உரிகம் ஈஸ்ட் டவுன் பிளாக் பகுதியில் அமைந்திருக்கிறது. இது அரசு மானியம் பெறும் பள்ளி. 1914ல் ஆரம்பித்தனர். இப்பள்ளியில், 1993 வரையில் 800 மாணவர்கள் தமிழ் வழிக்கல்வி பயின்றனர்.இவர்களுக்கு பாடம் நடத்த 11 ஆசிரியர்கள் இருந்தனர். தற்போது, 24 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 100 சதவீதம் தமிழர் நிறைந்த இப்பகுதியில் வீடு வீடாக சென்று, தமிழ்ப் பள்ளியில் உங்கள் பிள்ளைகளை சேர்க்குமாறு பெற்றோரிடம் கூறுகின்றனர். ஆயினும் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவில்லை.கொட்டகைப் பள்ளி: கென்னடிஸ் பகுதியில் நாடக அரங்க கொட்டகை அரசு தமிழ் ஆரம்பப் பள்ளி 80 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. இங்கு 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரையில் 700 மாணவர்கள் கல்வி பயின்றனர். தற்போது 10 மாணவர்களும், ஒரு ஆசிரியையும் உள்ளனர். வகுப்பு அறைகள் சிதிலமடைந்துள்ளன.மழை பெய்தால் வகுப்பு அறைகளில் தண்ணீர் தேங்குகிறது. மின் இணைப்பு கிடையாது. 30 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களுக்கு, இலவச இரவு பாட சாலையும் நடத்தப்பட்டது. பட்டதாரி இளைஞர்கள் பாடம் நடத்தினர். பொதுத்தேர்தலின்போது, இந்த வகுப்பறை ஓட்டுச்சாவடியாக மாற்றப்படும். அப்போது மட்டும், மின் இணைப்பு வழங்குவர்.செல்லப்பா பள்ளி: தங்கவயலில் அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் நிறைந்த பகுதி மாரிகுப்பம். இங்கு தென் பகுதியில் தமிழரான சுரங்க குத்தகைதாரர் செல்லப்பா என்பவர், 1906ல் தமிழ் ஆரம்பப் பள்ளியை ஏற்படுத்தினார். இப்பள்ளியில் படித்தவர்களில் பலர் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - டாக்டர்கள், பொறியாளர்கள் என உருவாகினர்.பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த ஜேம்ஸ் பால், 'சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது' பெற்றவர். ஆரம்ப காலத்தில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி படித்தனர். தற்போது தமிழில் படிக்க மாணவர்களே இல்லாததால் மூடிக் கிடக்கிறது. பள்ளியை நிறுவிய செல்லப்பா சிலையும் பராமரிப்பு இன்றி உள்ளது.தங்கவயலின் தமிழ் பகுதிகளின் நிலைமை, ஒரு சாம்பிள் தான். இன்னும் அடையாளம் காட்ட வேண்டியவை ஏராளமாக உள்ளன.