உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷ் பெயரில் ஸ்டேடியம்: மம்தா அறிவிப்பு

கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷ் பெயரில் ஸ்டேடியம்: மம்தா அறிவிப்பு

கோல்கட்டா: இந்திய மகளிர் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்ற ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக அண்மையில் வென்றது. கோப்பையை வெல்ல காரணமாக இருந்த வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் ஒட்டு மொத்த அணி நிர்வாகத்துக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும், வாழ்த்து மழையையும் பொழிந்து வருகின்றனர். இந் நிலையில் அணியின் முக்கிய வீராங்கனையாக திகழ்ந்த ரிச்சா கோஷை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கவுரவப்படுத்தி உள்ளார். அவருக்கான பாராட்டு விழாவில் பேசிய மம்தா பானர்ஜி, டார்ஜிலிங்கில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும். அந்த ஸ்டேடியத்துக்கு ரிச்சா கோஷ் பெயர் சூட்டப்படும் என்றார்.அவர் மேலும் கூறியதாவது: ரிச்சாவின் சாதனையை தலைமுறை, தலைமுறையாக நினைவு கூரப்பட வேண்டும் என்று மேற்கு வங்கம் விரும்புகிறது. 22 வயதிலேயே அவர் (ரிச்சா கோஷ்) சாம்பியானார். டார்ஜிலிங்கில் 27 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தை அமைக்க திட்டமிடுமாறு மேயரிடம் கூறி உள்ளேன்.எதிர்காலத்தில் ரிச்சா கோஷின் பங்களிப்பு, திறமையை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், அந்த ஸ்டேடியத்துக்கு ரிச்சா ஸ்டேடியம் என்று பெயர் சூட்டப்படும். இவ்வாறு முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். இந்த பாராட்டு விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவருமான சவுரவ் கங்குலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், ரிச்சா கோஷூக்கு ஜாம்பவான்கள் கங்குலி, ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் கையெழுத்திட்ட தங்க முலாம் பூசப்பட்ட கிரிக்கெட் மட்டை மற்றும் பந்து வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி