புதுடில்லி ரயில் நிலைய நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு
புதுடில்லி: புதுடில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, 18 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில், 14 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும், பலர், பிரயாக்ராஜ் நகரில் நடந்து வரும் கும்பமேளாவில் புனித நீராட சென்றவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவில் புனித நீராட பக்தர்கள் செல்வதற்கு வசதியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.பிரயாக்ராஜ் செல்லும் ரயில்களுக்காக, புதுடில்லி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 9:45 மணிக்கு ஏராளமான பயணியர் காத்திருந்தனர். ஏற்கனவே அதிகமான பயணியர் காத்திருந்த வேளையில், நேரம் செல்ல செல்ல நடைமேடைகளில் கூட்டம் அதிகரித்தது.பிரயாக்ராஜ் செல்லும் ரயில் புறப்பட தாமதமானதால், ரயில் நிலைய நடைமேடை 14 மற்றும் 15ல் ஏராளமான பயணியர் காத்திருந்தனர். அப்போது, பிரயாக்ராஜ் செல்லும் ரயில், 16வது நடைமேடைக்கு வரவுள்ளதாக செய்தி பரவியது. இது, ஏற்கனவே நீண்ட நேரம் காத்திருந்த பயணியரை திடீரென பீதிக்குள்ளாக்கியது. அப்போது, மேலும் அதிகமான பயணியர் அந்த இரு நடைமேடைகளை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களில் சிலர், எஸ்கலேட்டர் வழியே செல்ல முயன்ற போது, கீழே தவறி விழுந்தனர். அவர்கள் மீது இருபுறமும் இருந்து வந்த பயணியர் விழுந்ததில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் பலர் மூச்சு திணறி உயிரிழந்தனர். சம்பவம் நிகழ்ந்த நேரத்தில், அங்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்கு இல்லாததும், விபத்து நேர காரணம் என பலரும் கூறுகின்றனர்.எனினும், பிரயாக்ராஜ் செல்ல ஏராளமானோர் அந்த ரயில் நிலையத்தில் கூடியது தான், விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும், ரயில்கள் புறப்பட தாமதம் ஆனதும், ஒரு மணி நேரத்தில் 1,500க்கும் மேற்பட்டோருக்கு, முன்பதிவு அல்லாத டிக்கெட் கொடுக்கப்பட்டதும் தான் நெரிசலுக்கு காரணம் என கூறப்படுகிறது.இந்த நெரிசலில் சிக்கி, 15 பேர் பலியானதாக நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியான தகவலின் படி கூறப்பட்டது.இந்நிலையில், நெரிசலில் காயமடைந்தவர்களில் மேலும் மூன்று பேர் நேற்று இறந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை, 18 ஆக அதிகரித்தது.இதற்கிடையே, நெரிசல் நிகழ்ந்த ரயில்வே நடைமேடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்து, நெரிசலுக்கு என்ன காரணம் என, ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.புதுடில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக, 14 மற்றும் 15வது நடைமேடைகளில் குவிந்து கிடந்த செருப்புகள், கிழிந்த ஆடைகள், சிதறிக்கிடந்த உணவு போன்றவற்றை ரயில்வே ஊழியர்கள் இரவு முழுதும் அப்புறப்படுத்தினர்.புதுடில்லி ரயில் நிலையத்தில் நடந்த விபத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு 2.5 லட்சம், லேசாக காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என, ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வலியுறுத்தல்
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் கூறியதாவது:புதுடில்லி ரயில் நிலையத்தில் நடந்தது விபத்தல்ல, படுகொலை. அதற்கு பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும். அவர், ஒரு நிமிடம் கூட அந்த பொறுப்பில் இனியும் ஒட்டிக் கொண்டிருக்கக்கூடாது. அவராக ராஜினாமா செய்யாவிடில், பதவியிலிருந்து அவரை பிரதமர் மோடி நீக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
நடைமேடை மாற்றம் காரணமா?
விபத்தை நேரில் பார்த்தவர்களில் சிலர் கூறியதாவது:கும்பமேளா நிகழ்வு நடக்கும் பிரயாக்ராஜ் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், 14வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் ஸ்வந்திர சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாகின. இதனால், 12, 13 மற்றும் 14வது நடைமேடைகளில் பயணியர் கூட்டம் அதிகரித்தபடி இருந்தது.அப்போது, நடைமேடை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த மூன்று நடைமேடைகளில் நின்ற பயணியர், ஒரே நேரத்தில் 16வது நடைமேடை நோக்கி செல்லத் துவங்கினர். அவர்களில் பலர், 'எஸ்கலேட்டர்' வழியாக செல்ல முயன்றனர். அங்கு, எதிர்புறமாக வந்து கொண்டிருந்த பயணியருடன் மோதி நெரிசலில் சிக்கிக் கொண்டனர்.இவ்வாறு அவர்கள், வேறு விதமாக கூறினர்.
போலீசார் கூறுவது என்ன?
புதுடில்லி ரயில்வே ஸ்டேஷனில் ஏற்பட்ட நெரிசலுக்கு, ரயில் வரும் நடைமேடை எண் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது தான் காரணம் என பலரும் கூறியுள்ள நிலையில், இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய பின், போலீசார் கூறியதாவது:பிரயாக்ராஜ் செல்லும் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில், 14வது நடைமேடையில் ஏற்கனவே நின்று கொண்டிருந்தது. பயணியர் கூட்டத்தால், அந்த ரயில் நிரம்பி வழிந்தது. அதில் இடம் கிடைக்காதவர்கள், எஸ்கலேட்டர்களிலும், அருகில் உள்ள நடைமேடைகளிலும் திரண்டிருந்தனர். அப்போது, பிரயாக்ராஜ் செல்லும் மற்றொரு சிறப்பு ரயில், 16வது நடைமேடைக்கு வரும் என, அறிவிப்பு வெளியானது. இரண்டு ரயில்களின் பெயரும் பிரயாக்ராஜ் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டதும் பயணியரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து, மற்ற நடைமேடைகளில் திரண்டிருந்தவர்கள், ஒரே நேரத்தில் 16வது நடைமேடையை நோக்கி ஓடினர். இதனால் ஏற்பட்ட நெரிசல் காரணமாகவே விபத்து நிகழ்ந்தது. கடைசி நேரத்தில் நடைமேடை மாற்றப்பட்டதாக கூறுவது, தவறான தகவல்.இவ்வாறு போலீசார் கூறினர்.
திருத்திய துணைநிலை கவர்னர்
ரயில்வே ஸ்டேஷனில் ஏற்பட்ட நெரிசல் குறித்து, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவிட்ட டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா, கூட்ட நெரிசலால் இந்த விபத்து நடந்ததாகக் கூறினார். உடனே இந்த பதிவை திருத்திய அவர், கூட்ட நெரிசல் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, அதற்கு பதில், துரதிர்ஷ்டவசமான சம்பவம் என, குறிப்பிட்டார்.கவர்னர் சக்சேனா முதலில் வெளியிட்ட பதிவு மற்றும் அதை திருத்திய பதிவின், 'ஸ்கிரீன் ஷாட்'களை வெளியிட்டு, ஆம் ஆத்மி கூறியதாவது:புதுடில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலால் விபத்து ஏற்பட்டதை, கவர்னர் சக்சேனா முதலில் ஏற்றுக்கொண்டார். ஆனால், உடனே பொறுப்பில் இருந்து தப்பி ஓடும் வகையில், அந்த பதிவை அவர் திருத்தி உள்ளார். மத்திய அரசும், துணைநிலை கவர்னர் சக்சேனாவும் பொறுப்பை தட்டிக்கழிக்கின்றனர்.இவ்வாறு அக்கட்சி கூறியது.