உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீடு தேடி வரும் மருத்துவம் கோலாரில் புது திட்டம் துவக்கம்

வீடு தேடி வரும் மருத்துவம் கோலாரில் புது திட்டம் துவக்கம்

பெங்களூரு: தொற்றாத நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த நோய்களுக்கு வீடு தேடி சென்று மருத்துவம் அளிக்கும் புதிய திட்டத்தை கோலார் மாவட்டத்தில், கர்நாடக அரசு நேற்று துவக்கியது.இதய நோய், பக்கவாதம், புற்றுநோய், நீரிழிவு, நாள்பட்ட நுரையீரல் நோய், ரத்த அழுத்தம் உட்பட மற்றவர்களிடம் இருந்து, தொற்றாத நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இதற்கு கிராமங்களில் வசிக்கும் மக்கள், சரியான முறையில் சிகிச்சை பெறாதது காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

அறிவுரை

இந்நிலையில் தொற்றாத நோய்களுக்கு வீடு தேடி சென்று சிகிச்சை அளிக்கும், 'கிரஹ ஆரோக்ய யோஜனா' திட்டம், கர்நாடக அரசின் சுகாதார துறை சார்பில் நேற்று கோலாரில் துவக்கப்பட்டது. பெங்களூரு விதான் சவுதாவில் நடந்த நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் கோலார் மாவட்டத்தில் நான்கு பேருக்கு, மருந்துகள் வழங்கப்பட்டன. அவர்களிடம் சித்தராமையா உரையாடினார். உடல், ஆரோக்யத்தை பேணி பாதுகாக்கும்படி அறிவுரை கூறினார்.நிகழ்ச்சியில் சித்தராமையா பேசியதாவது:நமது நாட்டில் 25 சதவீதம் பேர் ரத்த அழுத்தத்தாலும், நீரிழிவு நோயால் 15.6 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகமாக கூட இருக்கலாம். கிராமப்பகுதிகளில் பெரும்பாலோனார் உடல் பரிசோதனை செய்வது இல்லை. இதனால் வீடு, வீடாக சென்று உடல்நலனை பரிசோதிக்க, கிரஹ ஆரோக்ய யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம்.ரத்த அழுத்தம், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருந்துகளை வழங்க சுகாதாரத் துறை தயாராக உள்ளது. டாக்டரின் அறிவுரையை மக்கள் பின்பற்ற வேண்டும். கிராம மக்கள் ரத்த அழுத்தம், நீரிழிவு பரிசோதனையை புறக்கணிக்கின்றனர். கோலாரில் இருந்து புதிய திட்டத்தை துவக்கி உள்ளோம். மாநிலம் முழுதும் செயல்படுத்த அரசு ஒத்துழைப்பு அளிக்கும். மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பேசியதாவது:கிரஹ ஆரோக்ய யோஜனா தொலைநோக்கு திட்டம். கிராம மக்களின் உயிரை பாதுகாக்க முக்கிய பங்கு வகிக்கும்.

தொலைநோக்கு திட்டம்

ரத்த அழுத்தம், நீரிழிவால் ஏற்படும் இறப்புகளை, இந்த திட்டம் நிச்சயம் தடுக்கும். நமது மாநிலத்தில் 11.5 சதவீதம் பேர் வாய் புற்றுநோயாலும், மார்பக புற்றுநோயால் 26 சதவீதம் பேரும்; கர்ப்பபை புற்றுநோயால் 18.3 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை, ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்றாது. புதிய திட்டத்தின் மூலம், ஆபத்தான நோய்களில் இருந்தும் மக்களை பாதுகாக்க முடியும். நாட்டில் இதுபோன்ற தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்தும், ஒரே மாநிலம் கர்நாடகா தான். இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த, சுகாதார ஊழியர்கள் தயாராக உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பரிசோதனை நடப்பது எப்படி?l சமூக சுகாதார, ஆரம்ப சுகாதார அலுவலர்கள், ஆஷா ஊழியர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு, ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளதா என்று பரிசோதிப்பர்l செவ்வாய், புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இப்பரிசோதனை நடத்தப்படும்l பாதிப்பு உறுதியானவர்களுக்கு மருந்து, மாத்திரை அடங்கிய கிட் வழங்கப்படும். உணவு, உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுவர். அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை