ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ஆந்திராவில் புது டெக்னிக்
அமராவதி ' ஆந்திராவில், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக, பொது வினியோக துறை சார்பில், 'ரேபிட் கிட்' எனப்படும், விரைவு சோதனை முறையை அமைச்சர் மனோகர் அறிமுகம் செய்தார். ஆந்திராவில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்துள்ளதால், அதை தடுக்க மாநில அரசு புதிய யுக்திகளை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து, மாநில பொது வினியோகத்துறை அமைச்சர் மனோகர் கூறியதாவது:
பொது வினியோகத்துறையில் நடக்கும் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, 'ரேபிட் கிட்' எனப்படும், விரைவு சோதனை பைகளை அறிமுகம் செய்துள்ளோம். இதன் மூலம் கடத்தல் ரேஷன் அரிசியை உடனடியாக கண்டறிந்து தடுக்க முடியும். இதற்காக மாநிலம் முழுதும், 700 மொபைல் சோதனை பைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் உள்ள, 'பொட்டாஷியம் தயோசயனைட்' மற்றும் 'ஹைட்ரோ குளோரிக் அமிலக்கரைசல்' திரவங்களை செறிவூட்டப்பட்ட ரேஷன் அரிசி மீது தெளித்தால் அது சிவப்பாக மாறும். சாதாரண அரிசியில் இந்த கரைசல் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இந்த ரேபிட் கிட் வாயிலாக கடத்தப்படுவது ரேஷன் அரிசியா என, உடனே அறிய முடியும். இதற்கு முன், பிடிபடும் அரிசியை ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி சோதனை செய்த பிறகே, அது ரேஷன் அரிசியா என்பது கண்டறியப்படும். அந்த முடிவுக்காக பல நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த உடனடி சோதனை கிட்ஸ் மூலம் மிக எளிதாக ரேஷன் அரிசியை கண்டறியலாம். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில் 5 லட்சம் குவின்டால் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கடந்த 14 மாதங்களிலேயே 5.65 லட்சம் குவின்டால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 230 பேர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.