UPDATED : அக் 26, 2024 07:21 PM | ADDED : அக் 26, 2024 05:04 PM
புனே: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 259 ரன் சேர்த்தது. பின்னர், பேட் செய்த இந்திய அணி 156 ரன்னுக்கு சுருண்டது. இதனால், 103 ரன்கள் முன்னிலையுடன் பேட் செய்த நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 310 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. தொடர்ந்து, 3ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும், இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. நியூசிலாந்து அணி 255 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இரண்டாவது இன்னிங்சிலும் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். ஜடேஜா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டையும் எடுத்தனர். 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், 359 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்திய அணி ஆரம்பத்தில் அதிரடி காட்டியது. மதிய உணவு இடைவேளையின் போது, 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 81 ரன் குவித்திருந்தது. பின்னர், மீண்டும் தொடங்கிய ஆட்டம் தலைகீழாக மாறியது. சான்ட்னர் மீண்டும் சுழலில் அசத்தினார். கில் (23),ஜெய்ஸ்வால் (77), கோலி (17), பண்ட் (0), வாஷிங்டன் சுந்தர் (21), சர்ப்ராஷ் கான் (9), அஸ்வின் (18) ஆகியோர் அடுத்தடுத்து ஏமாற்றம் அளித்தனர். ஜடேஜா மட்டுமே கடைசி வரை போராடினார். அவரும் கடைசியாக 42 ரன்னில் அவுட்டானதால், இந்திய அணி 245 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. அதுமட்டுமில்லாமல் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் இந்திய அணி தொடரை இழந்துள்ளது. கடந்த 4,331 நாட்களில் இந்திய மண்ணில் எந்த தொடரையும் இழந்தது கிடையாது. 18 தொடர்களை இந்திய அணி தொடர்ச்சியாக வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.