வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அரசியல் பின்புலம் இல்லாமல் இந்த அளவுக்கு பணம் பறிக்க முடிந்திருக்காது.. தவிரவும் நிறுவனங்கள் இந்த அளவுக்கு எளிதாக பணத்தை கையாளமுடியாது. கள்ளத்தனம் செய்ய பயன்படுத்தும் வழிமுறைகளை ஆராய வேண்டியது அவசியம்.
புதுடில்லி : அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக இந்தியர்களை அனுப்பி வைத்த முக்கிய குற்றவாளியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். நம் நாட்டிலிருந்து முறையான விசா இல்லாமல் அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளுக்கு சென்றவர்கள், சட்டவிரோதமாக அங்கு வசித்து வருகின்றனர். கடந்த ஜனவரியில், அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார். புகார்
அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்த 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள், நம் நாட்டுக்கு மூன்று கட்டங்களாக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பலரும் இதுபோல் அமெரிக்காவில் இருந்து மெக்சிகோ வழியாக நாடு திரும்பியுள்ளனர். வெளியுறவு துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூற்றின்படி, கடந்த 28ம் தேதி வரை 636 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ளனர். அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட இந்தியர்களில், பஞ்சாபின் தார்ன் தரன் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரும் இந்தியா வந்தார். டில்லியைச் சேர்ந்த முகவர் ஒருவர் வாயிலாக சட்டவிரோதமாக அமெரிக்கா சென்ற அவர், நாடு திரும்பியதும் இதுகுறித்து போலீசில் புகாரளித்தார். இந்த வழக்கு என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய என்.ஐ.ஏ., அதிகாரிகள், டில்லி திலக் நகரைச் சேர்ந்த ககன்தீப் சிங் எனப்படும் கோல்டி என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பஞ்சாபை சேர்ந்த விவசாயியிடம் 45 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு, அவரை சட்டவிரோதமாக அனுப்பி வைத்தது தெரியவந்தது. விசாரணை
இதுபோல் ஏராளமான நபர்களை ஸ்பெயின், எல் சால்வடார், குவாதமாலா, மெக்சிகோ வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அவர் அனுப்பி வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பயணத்தின்போது, அமெரிக்கா செல்பவர்களிடம் இருந்து கோல்டியின் கூட்டாளிகள் வலுக்கட்டாயமாக பணம், நகை உள்ளிட்டவற்றை பறித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட கோல்டியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசியல் பின்புலம் இல்லாமல் இந்த அளவுக்கு பணம் பறிக்க முடிந்திருக்காது.. தவிரவும் நிறுவனங்கள் இந்த அளவுக்கு எளிதாக பணத்தை கையாளமுடியாது. கள்ளத்தனம் செய்ய பயன்படுத்தும் வழிமுறைகளை ஆராய வேண்டியது அவசியம்.