| ADDED : ஜூலை 06, 2025 01:13 AM
புதுடில்லி: 'டாங்கி' பாதை வழியாக அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக இந்தியர்களை அனுப்பி வைத்த இரண்டு முக்கிய நபர்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். முறையான ஆவணங்கள் இல்லாமல் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று, அங்கிருந்து கால்நடையாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதே, 'டாங்கி' பாதை எனப்படும் கழுதை பாதை என்று அழைக்கப்படுகிறது. இந்த, 'டாங்கி' பாதையிலும் பல லட்சம் ரூபாய் கொடுத்தே பயணிக்கின்றனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் அண்மையில் நாடு கடத்தப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் நம் நாட்டில் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது ஹிமாச்சல பிரதேசம் மற்றும் டில்லியைச் சேர்ந்த இருவர், 'டாங்கி' ஏஜென்டுகளாக செயல்பட்டது தெரியவந்தது.கைது செய்யப்பட்ட இருவரும், மனிதக்கடத்தலில் ஈடுபட்டு கடந்த மார்ச்சில் கைதான ககன்தீப் சிங்கின் கூட்டாளிகள். இவர்கள், ஒவ்வொரு பயணியிடமிருந்தும் 45 லட்சம் ரூபாய் பெற்று, அவர்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதாக உறுதியளித்துள்ளனர்.