பிரமாண்ட பேரணியுடன் நிகில் வேட்புமனு தாக்கல்; இம்முறை சூழ்ச்சி எடுபடாது என்கிறார் குமாரசாமி
பெங்களூரு ; சென்னப்பட்டணா தொகுதியில், நிகில் குமாரசாமி நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.காலியாக உள்ள சென்னபட்டணா, ஷிகாவி, சண்டூர் - தனி தொகுதிகளுக்கு நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. ஷிகாவி, சண்டூர் தொகுதிகளில், பா.ஜ., போட்டியிடுகிறது.நேற்று முன்தினம் சென்னப்பட்டணா தொகுதி தலைவர்கள், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்திய ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா, தனது பேரன் நிகில் குமாரசாமியை, கூட்டணி வேட்பாளராக அறிவித்தார். சுவாமி தரிசனம்
இந்நிலையில், நேற்று காலை, பெங்களூரு ஜே.பி., நகரில் உள்ள கெங்கல் ஆஞ்சநேயர் கோவில், திருமலகிரி வெங்கடேஸ்வர சுவாமி கோவில்களுக்கு தாத்தா தேவகவுடா, தந்தை குமாரசாமி, மனைவி ரேவதி ஆகியோருடன் சென்று, நிகில் சுவாமி தரிசனம் செய்தார்.தரிசனத்துக்கு பின், குமாரசாமி கூறியதாவது:சிலரின் சூழ்ச்சியால், இரண்டு முறை தேர்தலில் நிகில் தோல்வி அடைந்தார். இம்முறை சூழ்ச்சி எடுபடாது. அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தொண்டர்கள் அன்புடன் கூறியதால், நிகில் போட்டியிடுகிறார். வெற்றியும், தோல்வியும் சகஜம்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது. இம்மூன்று தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை, மக்கள் தேர்ந்தெடுப்பர். நாட்டில் நல்லிணக்கத்தை கொண்டு வந்தவர் மோடி.இவ்வாறு அவர் கூறினார்.தேககவுடா கூறுகையில், ''எனது பேரன் நிகில் வெற்றி பெறுவார். கடவுளின் மீது எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது,'' என்றார்.நிகில் கூறுகையில், ''என் மீது பிரதமர் மோடி வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன். மூன்று தொகுதிகளிலும் இரு கட்சி தொண்டர்களும் ஒற்றுமையுடன் பணியாற்றுகின்றனர். சென்னப்பட்டணாவில் இளம் வேட்பாளரான என்னை தொகுதி மக்கள் தேர்ந்தெடுப்பர் என்று நம்பிக்கை உள்ளது,'' என்றார். தொண்டர்கள் அலை
பின் குமாரசாமியும், நிகிலும் காரில் சென்னப்பட்டணா சென்றனர். நகரின் செர்வா சதுக்கத்தில் இருந்து தாலுகா அலுவலகம் வரை தங்களின் பலத்தை காட்ட இரு கட்சி தொண்டர்களும் கடல் போல் திரண்டிருந்தனர்.திறந்த வாகனத்தில் பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் தொண்டர்கள், பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி சென்றனர். வழியெங்கும் கட்சியினர் ஆரவார கோஷம் எழுப்பினர். தாலுகா அலுவலகத்தில் நிகில் வேட்புமனு தாக்கல் செய்தார்.அப்போது, அவரது மனைவி ரேவதி, தந்தை குமாரசாமி, பா.ஜ.,வின் முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, பா.ஜ., - எம்.பி., ராகவேந்திரா ஆகியோர் உடனிருந்தனர்.
26_DMR_0002, 26_DMR_0003, 26_DMR_0004, 26_DMR_0005
வேட்புமனுத் தாக்கல் செய்யும் முன்பு திருமலகிரி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் குடும்பத்துடன் நிகில் சுவாமி தரிசனம் செய்தார். இடம்: ஜே.பி., நகர், பெங்களூரு. (2வது படம்) திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்ற தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள். (3வது படம்) சாலை முழுதும் இரு கட்சித் தொண்டர்கள் சூழ்ந்திருந்தனர். (கடைசி படம்) வேட்புமனுத் தாக்கல் செய்த நிகில் இடம்: சென்னப்பட்டணா, ராம்நகர்.