உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒட்டும் இல்லை; உறவும் இல்லை ஷர்மிளா மீது ஜெகன் காட்டம்

ஒட்டும் இல்லை; உறவும் இல்லை ஷர்மிளா மீது ஜெகன் காட்டம்

ஹைதராபாத் 'சரஸ்வதி பவர் அண்டு இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் பங்குகளை, தன் சகோதரி ஷர்மிளா சட்டவிரோதமாக அவரது பெயருக்கு மாற்றி விட்டதாக, ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டி உள்ளார்.ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா. இவர், இந்த ஆண்டு துவக்கத்தில் சகோதரருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் காங்கிரசில் இணைந்தார்.பரிசுப்பத்திரம்பின், ஆந்திர காங்., தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். எனினும் மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில், கடப்பா தொகுதியில் போட்டியிட்டு ஷர்மிளா தோல்வி அடைந்தார்.இந்நிலையில், சரஸ்வதி பவர் அண்டு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில், தனக்கும், தன் மனைவி பாரதிக்கும் உள்ள பங்குகளை, ஷர்மிளா சட்டவிரோதமாக அவரது பெயருக்கு மாற்றி உள்ளதாக, அவரது சகோதரரும், முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும் இது தொடர்பாக, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் ஹைதராபாத் கிளையில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.அதன் விபரம்:சரஸ்வதி பவர் அண்டு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில், எனக்கும், என் மனைவி பாரதிக்கும் பங்குகள் உள்ளன.அன்பு மற்றும் பாசத்தால், பரிசுப் பத்திரம் வாயிலாக இந்த பங்குகளை வழங்குவதாக, 2019 ஆக., 31ல், என் சகோதரி ஷர்மிளாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். நன்றியுணர்வுஅதில், நிலுவையில் உள்ள அமலாக்கத்துறை வழக்குகள் குறித்தும் குறிப்பிட்டிருந்தேன். சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றாமல் பங்கு பரிமாற்றம் செய்வது, ஆபத்தை ஏற்படுத்தும் என, சில நாட்களுக்கு பின் ஷர்மிளாவுக்கு கடிதம் எழுதினேன். நாளடைவில் எனக்கும், ஷர்மிளாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்ததே.இதையடுத்து, நான் எழுதிக் கொடுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை திரும்ப பெற விரும்புவதாக ஷர்மிளாவிடம் தெரிவித்தேன்.சரஸ்வதி பவர் அண்டு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதில், என் பங்குகளும், என் மனைவி பாரதியின் பங்குகளும், ஷர்மிளா பெயருக்கும், தாய் விஜயம்மா பெயருக்கும் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளன. இது அதிர்ச்சி அளிக்கிறது.நன்றியுணர்வு இல்லாமல், என் நலனை பற்றி கவலைப்படாமல் ஷர்மிளா செயல்படுகிறார். அரசியல் ரீதியாக என்னை எதிர்ப்பது மட்டுமல்லாமல், என் மீது தொடர்ந்து அவர் அவதுாறு பரப்புகிறார். வழக்குஇதனால், அண்ணன் - தங்கை என்ற உறவு சிதைந்து விட்டது. இனி ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. ஷர்மிளாவுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் ஹைதராபாத் கிளை, வழக்கு விசாரணையை நவம்பருக்கு ஒத்தி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAMAKRISHNAN NATESAN
அக் 24, 2024 14:33

குடும்பத்தில் நால்வர் இருந்தாலும் நால்வரும் ஆளுக்கொரு கட்சியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் எப்போதும் கல்லா கட்டலாம் ...... மக்களுக்கு முன்பு பகை ..... வீட்டிற்குள் நகை ....... அதாவது சிரிப்பு .....


Venkateswaran Rajaram
அக் 24, 2024 11:02

இவை அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில் திட்டம் போட்டு கொள்ளை அடித்தவை ....மக்கள் ஆகிய நாம் தான் முட்டாள்கள் மற்றும் கோமாளிகள் ...இங்கே இரண்டு திருட்டு கலகங்களும் இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன ...


Indhuindian
அக் 24, 2024 06:09

ரொம்பவும் பாசக்கார அண்ணண் பாசமலர் சிவாஜி - சாவித்ரியையே தோக்கடிச்சிட்டாரு


J.V. Iyer
அக் 24, 2024 04:37

பணம், பதவி என்றால் அண்ணானாவது, தங்கையாவது? தமிழகத்தையே எடுத்துக்கொள்ளுங்களேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை