10 லட்சம் வாகனங்களுக்கு நோட்டீஸ்: போக்குவரத்து விதிமீறல்
தில்ஷாத் கார்டன்:போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக கடந்த 22ம் தேதி வரை இந்த ஆண்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான நோட்டீஸ்களை போலீசார் வழங்கியுள்ளனர்.போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை:ஜனவரி 1ம் தேதி முதல் கடந்த 22ம் தேதி வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை நிறுத்தியதற்காக 10 லட்சத்திற்கும் அதிகமான நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதே காரணத்திற்காக 4.79 லட்சம் சலான்கள் வழங்கப்பட்டுள்ளன.அக்டோபர் 1 முதல் நவம்பர் 22 வரை மட்டும், 62,042 சலான்களும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான நோட்டீஸ்களும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் சலான்களை பெற்ற வாகன ஓட்டிகளிடம் இருந்து தலா 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.முறையற்ற வகையில் நிறுத்தியிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் கட்டணமாக இருசக்கர வாகன ஓட்டிகளிடம் இருந்து தலா 200 ரூபாயும், கார் உள்ளிட்ட இலகு ரக வாகன ஓட்டிகளிடம் இருந்து தலா 400 ரூபாயும் வசூலிக்கப்பட்டது.இதுதவிர, ஒருவழிப்பாதையில் வாகனத்தை ஓட்டி வந்ததற்காக 98,929 சலான்கள் வழங்கப்பட்டு, தலா 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.மேலும், தடைசெய்யப்பட்ட நேரத்தில் வந்ததற்காக சரக்கு மற்றும் பயணியர் உட்பட 1.29 லட்சம் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமீறலுக்கு ஒரு வாகனத்துக்கு தலா 20,000 அபராதம் விதிக்கப்பட்டது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.