UPDATED : மார் 07, 2025 10:35 AM | ADDED : மார் 05, 2025 10:11 PM
புதுடில்லி: அதிக சொத்து வைத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 2028 ம் ஆண்டு 9.5 சதவீதம் அதிகரிக்கும் என சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.10 லட்சம் அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பில் ரூ.8.70 கோடி) அளவுக்கு சொத்து வைத்து இருக்கும் தனி நபர்கள், அதிக சொத்து வைத்திருப்பவர்கள் என வகைப்படுத்தப்படுகின்றனர். அந்த வகையில், நைட் பிராங்க் என்ற நிறுவனம் ஒன்று, இந்தியர்களின் சொத்து மதிப்பு குறித்து பட்டியல் வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: அதிக சொத்து வைத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 2024 ம் ஆண்டு 85,698 ஆக இருந்தது. இது 2028 ம் ஆண்டு 9.5 சதவீதம் அதிகரித்து 93,753 ஆக உயரும். இதற்கு நீண்ட கால பொருளாதார வளர்ச்சி, முதலீட்டிற்கான வாய்ப்புகள் அதிகரிப்பு ஆகியன உலகளவில் இந்தியர்களின் சொத்து மதிப்பு அதிகரிக்க காரணமாக அமைந்து உள்ளது.இந்த எண்ணிக்கை 2023ல் 80,686 ஆகவும்2024 ல் 85,698 ஆகவும் இருந்தது.உலகளவில் அதிக சொத்து வைத்திருக்கும் நபர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இங்களில் அமெரிக்கா(9,05,413) சீனா (4,71,634)ஜப்பான் (1,22,119)ஆகிய நாடுகள் உள்ளன.உலகளவிலும் அதிகம் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2023 ல் இருந்து 2024ம் ஆண்டில் 4.4 சதவீதம் அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.