| ADDED : ஜூன் 23, 2025 02:50 AM
பாலசூர்: ஒடிஷாவில் பாயும் சுவர்ணரேகா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், 50 கிராமங்கள் மூழ்கியுள்ளன. இதில் இளைஞர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.ஜார்க்கண்டின் சாந்தில் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. ஏற்கனவே கடும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒடிஷாவின் சுவர்ணரேகா நதியில், இந்த உபரி நீரால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.ஒடிஷாவின் பாலசூர் மாவட்டத்தில், 50 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அந்த கிராமங்களைச் சேர்ந்த, 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.இதற்கிடையே, பலியாபால் அருகே பிஷ்ணுபூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.தற்போது வெள்ளம் குறைந்தாலும், இந்த கிராமங்களில் இயல்பு நிலை திரும்புவதற்கு, ஐந்து நாட்களாகும் என, அதிகாரிகள் கூறினர்.
காஷ்மீரில் கடும் வெயில்
ஒடிஷா, மேற்கு வங்கம் உட்பட கிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 134 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வெயில் பதிவாகியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பநிலை, 35.5 டிகிரி செல்ஷியசாக பதிவானது. இரவு நேர வெப்பநிலை 23 டிகிரியாக இருந்தது. இது 135 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஆகும்.