உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூடுதல் லக்கேஜை அனுமதிக்காததால் விமான ஊழியரை தாக்கிய அதிகாரி

கூடுதல் லக்கேஜை அனுமதிக்காததால் விமான ஊழியரை தாக்கிய அதிகாரி

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில், விமானத்தில் கூடுதல் உடைமைகளை எடுத்துச் செல்ல கட்டணம் செலுத்த மறுத்ததுடன், விமான நிறுவன ஊழியர்களை தாக்கியதாக, ராணுவ உயர் அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து டில்லிக்கு, கடந்த மாதம் 26ம் தேதி 'ஸ்பைஸ்ஜெட்' விமானம் புறப்பட்டது. இதில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் பயணித்தார். அவருடைய உடைமைகளை பரிசோதித்தபோது, நிர்ணயிக்கப்பட்ட 7 கிலோ எடையைவிட அதிகமாக, 16 கிலோ கொண்டு வந்திருந்தார். இதையடுத்து, அதற்குரிய கூடுதல் கட்டணத்தை செலுத்தும்படி விமான நிறுவன ஊழியர்கள் கேட்டனர். எனினும், அதை பொருட்படுத்தாமல் தன் உடைமைகளுடன் கட்டுப்பாடுகளை மீறி உள்ளே நுழைய முயன்றார் அந்த அதிகாரி. அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் உதவியுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுவன ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த ராணுவ அதிகாரி, ஸ்பைஸ்ஜெட் நிறுவன ஊழியர்களை சரமாரியாக தாக்கினார். இதில், ஒரு ஊழியரின் முதுகு தண்டுவடம் உடைந்ததுடன், தாடையிலும் படுகாயம் ஏற்பட்டது. உடனே, அருகே இருந்த சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள், ராணுவ அதிகாரியை தடுத்து நிறுத்தியதுடன், படுகாயமடைந்த ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து, தாக்குதல் நடத்திய ராணுவ அதிகாரி மீது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சார்பில் போலீசில் புகார் அளித்ததுடன், தங்கள் விமானத்தில் பறக்கவும் தடை விதித்தது. இது தொடர்பாக ராணுவ அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடிதம் எழுதிஉள்ளது. இதற்கிடையே, அந்நிறுவனம் அளித்த புகாரின்படி ராணுவ உயர் அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ