நாக்பூர்: நாக்பூர் வன்முறை வழக்கின் முக்கிய குற்றவாளியின் இரண்டு மாடி வீடு, ஜே.சி.பி., வைத்து நேற்று இடிக்கப்பட்டது. மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசிய வாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் மொகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறை உள்ளது. போராட்டம்
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அவுரங்கசீப் கல்லறையை அகற்றும்படி, மஹாராஷ்டிராவில் ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாக்பூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின்போது, முஸ்லிம்களின் புனித நுால் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதையடுத்து, கடந்த 17ம் தேதி நாக்பூரில் பயங்கர கலவரம் வெடித்தது. பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. மூன்று துணை கமிஷனர்கள் உட்பட 33 போலீசார் காயமடைந்தனர்.வன்முறைக்கு காரணமான, முக்கிய குற்றவாளியான சிறுபான்மையினர் ஜனநாயக கட்சி தலைவர் பாஹிம் கான் மற்றும் 100-க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, கலவரத்தில் சேதமான சொத்துக்களுக்கான நஷ்டஈடுத் தொகை, வன்முறையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும், தவறினால், அவர்களின் சொத்துக்களை, விற்பனை செய்து பணம் வசூலிக்கப்படும் எனவும், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அறிவித்தார். இந்நிலையில், யசோதரா நகரின் சஞ்சய் பாக் காலனி பகுதியில் அமைந்துள்ள பாஹிம் கானின் இரண்டு மாடி வீடு நேற்று இடிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் நாக்பூர் மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பிய நிலையில், நேற்று காலை ஜே.சி.பி., இயந்திரங்களை வைத்து, மாநகராட்சி அதிகாரிகள் வீட்டை இடித்துத் தள்ளினர். போலீஸ் பாதுகாப்பு
அந்தப் பகுதி முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதற்கிடையே, நாக்பூர் கலவரத்தில் கைதானவர்களின் வீடுகளை இடிப் பதற்கு, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நேற்று பிற்பகல் தடை விதித்தது. இந்த உத்தரவு வெளியாவதற்கு முன்பே பாஹிம் கானின் வீடு நேற்று காலை இடிக்கப்பட்டது.
நோட்டீஸ்
கடந்த மாதம் இந்தியா - -பாக்., கிரிக்கெட் போட்டியின்போது, இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டதாக மஹாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தின் மால்வனைச் சேர்ந்த கிட்டபுல்லா ஹமிதுல்லா கான், அவரது மனைவி, மகன் மீது வழக்கு பதிவானது. அதைத் தொடர்ந்து, விதிகளை மீறி, கட்டப்பட்டதாக, கடந்த பிப்., 24-ல் ஹமிதுல்லாவின் வீடு, கடை இடிக்கப்பட்டது.இது, வீடுகளை இடிப்பது தொடர்பாக, 2024ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது என கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஹமிதுல்லா தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி மஹாராஷ்டிரா உள்ளாட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.