உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆன்லைன் சூதாட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்

ஆன்லைன் சூதாட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்

'ஆன்லைன்' சூதாட்ட தடைச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும், உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர். 'ஆன்லைன்' சூதாட்ட விளையாட்டுகள் மற்றும் செயலிகள் மூலமாக நாடு முழுதும் ஆயிரக்கணக்கானோர் பணத்தை இழந்ததுடன் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்தது. தடை இதையடுத்து, ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை வைத்து சூதாடுவதை தடை செய்யும் வகையில், ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குமுறை மற்றும் தடை மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. மத்திய அரசின் இந்த சட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பாக கர்நாடகா, டில்லி உள்ளிட்ட பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. 'ஒரே விவகாரத்தில் பல்வேறு உயர் நீதிமன்றங்கள் வெவ்வேறு விதமான உத்தரவுகளையும், தீர்ப்புகளையும் வழங்கினால், அது கடுமையான குழப்பத்தை ஏற்படுத்தும். 'நீதிமன்றங்களின் நேரம் விரயமாவதை தவிர்க்க, அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்' என, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வி.விஸ்வநாதன் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 'உயர் நீதிமன்றங்களில் இது தொடர்பாக உள்ள அனைத்து வழக்குகளையும், உச்ச நீதிமன்றமே இனி விசாரிக்கும்' என, உத்தரவிட்டனர். கோரிக்கை மேலும், 'வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும்' என, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'மத்திய அரசின் சட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. எனவே, அடுத்த ஒரு வாரத்தில் எதுவும் நடந்து விடாது' எனக்கூறி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை