உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓரணியில் எதிர்க்கட்சிகள்

ஓரணியில் எதிர்க்கட்சிகள்

புதுடில்லி : அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ளன. ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முயன்ற, காந்தியவாதி அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டது, பா.ஜ., தலைமையிலான தே.ஜ.கூட்டணி கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு, பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் : மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டதற்காகவே, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. ஹசாரே கைது நடவடிக்கை குறித்து, பார்லிமென்டின் இரு சபைகளிலும், பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். வேறு யாரும் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த விவகாரத்தில், மத்திய அரசு பீதியடைந்துள்ளது என்பது, வெளிப்படையாகத் தெரிகிறது.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் : அமைதியான முறையில் போராட்டம் நடத்திய, ஹசாரேவை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அரசின் இந்நடவடிக்கையால் மாணவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் சாலையில் இறங்கி போராடும் நிலைக்கு வந்துள்ளனர். உடனடியாக, ஹசாரேவும் அவரது ஆதரவாளர்களும் விடுவிக்கப்பட வேண்டும்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் : மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களுக்கு ஜனநாயகத்தின் மதிப்பு தெரியவில்லை. அவர்கள் மூர்க்கத்தனத்தை கடைபிடிக்கின்றனர். ஹசாரே கைது செய்யப்பட்டது எமர்ஜென்சி நடவடிக்கைக்கான ஒத்திகை தான். இந்த ஜனநாயக படுகொலையை, மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.

ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி : போராட்டம் நடத்துவது, மக்களின் அடிப்படை உரிமை. இதை, மத்திய அரசு நசுக்கப் பார்க்கிறது. போலீஸ் சீருடைக்கு பின், ஆளும் கட்சியினர் மறைந்து கொள்ள முயற்சிக்கின்றனர் .

தெலுங்குதேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு : அமைதியான முறையில் போராடிய ஹசாரேவை கைது செய்து, திகார் சிறையில் அடைத்துள்ளது ஜனநாயகத்துக்கு விரோதமானது, கொடுங்கோலாட்சிக்கு ஒப்பானது. ஹசாரே கைது செய்யப்பட்டதற்கு, பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் : காங்கிரஸ் தலைவர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை குவித்து வைத்துள்ளனர். இதை எதிர்த்து ஹசாரே நடத்தும் போராட்டத்தால் அவர்கள் பீதியடைந்துள்ளனர். ஹசாரேவை கைது செய்துள்ளது, ஜனநாயக படுகொலையாகும். அவருக்கு நாங்கள் துணை நிற்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை