உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்பு மசோதா அறிக்கை தாக்கலுக்கு பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

வக்பு மசோதா அறிக்கை தாக்கலுக்கு பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக வக்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய சட்ட திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆய்வு செய்த பார்லிமென்ட் கூட்டுக்குழு, இறுதி அறிக்கையை பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தது.இதனால், ராஜ்யசபா அலுவல்கள் நேற்று அமளியுடன் துவங்கின. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பலரும், சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.நிராகரிப்புபெரும் அமளிக்கு மத்தியில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்துமே போலியானவை. அரசு தன் விருப்பத்திற்கு ஏற்ப விஷயங்களை தொகுத்துள்ளது.வக்பு சொத்து விஷயங்களுக்கு, சற்றும் தொடர்பில்லாத பலரையும் அழைத்து கருத்துக்கள் கேட்டு, அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. முறையாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் எதுவுமே ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அறிக்கை தயாரிப்பதற்கு முன், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், தங்களது எதிர் கருத்துக்களை பதிவு செய்தும், அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே இருந்த அவர்களது சில கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன. இவற்றை ஏற்க முடியாது. இந்த அறிக்கையை மீண்டும் ஆய்வுக்கு அனுப்பி, அதன்பின் பார்லிமென்டில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.அப்போது, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.அமளியும், கூச்சலும்இத்தனை அமளிகளுக்கு மத்தியில் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “இந்த அறிக்கையில் எந்த பகுதியையும் நீக்கவில்லை. அறிக்கையில் எதிர்க்கட்சிகளின் கருத்துக்கள் அனைத்துமே உள்ளன. எனவே, ஏதோ சில பகுதிகளை நீக்கிவிட்டதாக கூறி, எதிர்க்கட்சிகள் சபையை தவறாக வழிநடத்துகின்றன.“உண்மைக்கு மாறான விஷயங்களை வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சி தலைவரும் தேவையற்ற பிரச்னையை கிளப்புவது மிகவும் வருத்தமளிக்கிறது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் விதிமுறைகள் எதுவுமே மீறப்படவில்லை. எதிர் கருத்துக்கள் அனைத்துமே அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன,” என்றார். இந்த விவகாரத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சபையில் அமளியும், கூச்சலும் நிலவியது. ராஜ்சபாவில் காவலர்கள் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.இருப்பினும் அரசின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று கூறி, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

'எதிர் கருத்துக்களுக்கு ஆட்சேபனை இல்லை'

லோக்சபாவில் காலையில் அலுவல்கள் துவங்கியதுமே கடும் அமளி ஏற்பட்டது. வக்பு மசோதா மீதான பார்லிமென்ட் கூட்டுக்குழு அறிக்கையை ஏற்கக் கூடாது என்று, கடும் கூச்சல் குழப்பத்தில் எதிர்க்கட்சிகள் இறங்கவே, அவர்களை சமாதானப்படுத்தும் வகையில், சபாநாயகர் ஓம் பிர்லா, “உங்கள் பிரசனைகள் எதுவானாலும் ஜீரோ நேரத்தின்போது பேசுங்கள்,” என்று கூறியும் எதிர்க்கட்சிகள் கேட்க மறுத்ததால், சபை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.பின், மதியம் 2:00 மணிக்கு சபை கூடியதும் வக்பு மசோதா மீதான கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும், எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் இறங்கினர். அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, “லோக்சபா அலுவல்களில் வக்பு அறிக்கை மீதான எதிர்க்கட்சிகளின் எதிர் கருத்துக்கள் இடம்பெற வேண்டும். அதுகுறித்து எங்கள் கட்சிக்கு எந்த ஆட்பேசனையும் இல்லை,” என்றார். இதன்பின், லோக்சபா மற்றும் ராஜ்யசபா அலுவல்கள், மார்ச் 10 வரை ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாகம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை