சட்டவிரோத இறைச்சி விற்பனை நடவடிக்கை எடுக்க உத்தரவு
விக்ரம்நகர்:“நவராத்திரிக்கு முன்னதாக சட்டவிரோத இறைச்சி விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, சட்டசபையில் பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா அறிவித்தார்.சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் நேற்றைய கேள்வி நேரத்தின்போது, நவராத்திரி திருவிழாவிற்கு முன்னதாக நடைபாதைகளில் இறைச்சி வெளிப்படையாக விற்கப்படுவது குறித்து, பா.ஜ.,வின் எம்.எல்.ஏ., கர்னைல் சிங் கவலையை வெளிப்படுத்தினார்.இதற்கு பதிலளித்து மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா கூறியதாவது:நவராத்திரிக்கு முன்னதாக சட்டவிரோத இறைச்சி விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாராவது சட்டவிரோதமாக எங்கும் அமர்ந்திருந்தால், அவர்கள் அகற்றப்பட வேண்டும்.தங்கள் தொகுதிகளில் ஏதேனும் ஆக்கிரமிப்புகளை பார்த்தால் எம்.எல்.ஏ.,க்கள் புகார் அளிக்கலாம். இத்தகைய ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நான் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிடுவேன்.தலைநகரில் சட்டவிரோத இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்களை அகற்ற ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.