ஜனவரியில் ஓவிய சந்தை சித்ரகலா பரிஷத் தகவல்
பெங்களூரு: கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில், ஜனவரி 5ம் தேதி பெங்களூரு குமார கிருபா சாலையில் ஓவிய சந்தை நடத்த முடிவு செய்துள்ளது. இதில் பங்கேற்க ஆயிரக்கணக்கான கலைஞர்கள், பெயரை பதிவு செய்துள்ளனர்.சித்ரகலா பரிஷத் வெளியிட்ட அறிக்கை:ஆண்டு தோறும், பெங்களூரில் உள்ள கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில், ஓவிய சந்தை நடப்பது வழக்கம். அதே போன்று, 2025 ஜனவரி 5ம் தேதி, பெங்களூரின் குமார கிருபா சாலையில் ஓவிய சந்தை நடக்கும். இதில் பங்கேற்க கலைஞர்களிடம், கடந்த மாதம் விண்ணப்பம் கோரப்பட்டது. இதுவரை 3,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.கர்நாடகா மட்டுமின்றி, தமிழகம், கேரளா, ஆந்திரா, கோவா, மஹாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்கம், ஒடிசா உட்பட பல்வேறு மாநிலங்களின் கலைஞர்கள் விண்ணப்பம் அனுப்பியுள்ளனர்.தொழில் சார்ந்த கலைஞர்கள், ஓவியக்கலை மாணவர்களும், தங்களின் படைப்புகளை கண்காட்சியில் வைப்பர். மைசூரு பாரம்பரிய ஓவியங்கள், ராஜஸ்தானி, தஞ்சாவூர் பாணி என, பலவிதமான ஓவியங்கள் கிடைக்கும்.லிதோகிராப், ஆயில் பெயின்டிங், கேலி சித்திரங்கள் வரையவும் வாய்ப்பு இருக்கும். ஓவிய கண்காட்சியில், 100 ரூபாய் முதல் லட்சக்கணக்கான ரூபாய் விலையுள்ள ஓவியங்கள் கிடைக்கும்.