பாக்., குடும்பங்களுக்கு உதவி செய்தவர் கைது
ஜிகனி: பாகிஸ்தான் குடும்பங்கள் இந்தியா வர, உதவி செய்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.பாகிஸ்தானின், கராச்சியை சேர்ந்த ரஷீத் சித்திக், 48, மனைவி ஆயிஷா அனிப், 38, இவரது பெற்றோர் முகமது ஹனீப், 73, ரூபினா, 61 ஆகியோர், பெங்களூரு ஜிகனியில் சட்டவிரோதமாக வசித்தனர்.கடந்த மாதம் 30 ம் தேதி கைது செய்யப்பட்டனர். ரஷீத் சித்திக் கொடுத்த தகவலின்படி, பீன்யாவில் வசித்த இன்னொரு பாகிஸ்தான் குடும்பத்தின் சையது தாரிக், 51, அனிலா தாரிக், 48, தம்பதியின் 13 வயது மகள் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் அனைவரும் தங்களது பெயர்களை, ஹிந்து பெயர்களாக மாற்றி போலியாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட, ஆவணங்கள் பெற்று இருந்தனர்.நேபாளத்தின் மெஹ்தி அறக்கட்டளை மதகுரு யூனுஸ் உத்தவுப்படி, இரண்டு குடும்பமும் பெங்களூரு வந்து, மதத்தை பரப்பும் வேலை செய்தது தெரிந்தது. இவர்களுக்கு போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை, பெங்களூரின் பர்வேஸ் என்பவர் வாங்கி கொடுத்ததும் தெரியவந்தது. அவரை ஜிகனி போலீசார் தேடி வந்தனர்.டில்லி தப்பி செல்ல, நேற்று முன்தினம் பர்வேஸ் பெங்களூரு சிட்டி ரயில் நிலையம் வந்தார். அங்கு சென்ற ஜிகனி போலீசார், அவரை கைது செய்தனர்.