புதுடில்லி 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் நம் ராணுவத்திடம் மரண அடி வாங்கியும், பயங்கரவாத ஆதரவை பாகிஸ்தான் ராணுவம் கைவிடவில்லை. தாக்குதலில் அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களை மறுசீரமைக்கும் பணியை அந்நாட்டு ராணுவம் தற்போது முடுக்கிவிட்டுள்ளதாக நம் உளவுத்துறை எச்சரித்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஹிந்து மதத்தை சேர்ந்த சுற்றுலா பயணியரை குறிவைத்து ஏப்., 22ல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் நம் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மே 7 அதிகாலை தரைமட்டமாகின. இதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியாகினர். லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது, ஹிஜ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத முகாம்களின் முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. எச்சரிக்கை
குறிப்பாக பஹவல்பூரில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகமும் அழிந்தது. இந்த தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய பாக்., ராணுவம், அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களை சீரமைக்க உதவுவதாக உறுதியளித்தது. தாக்குதல் நடந்து இரண்டு மாதங்கள் கூட முடியாத நிலையில், அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களை சீரமைக்கும் பணிகளை பாகிஸ்தான் ராணுவம் துவங்கிஉள்ளது. இதை உறுதிப்படுத்தியுள்ள நம் உளவுத் துறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள எச்சரித்துள்ளது. இந்த சீரமைப்பு பணியில், பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அந்நாட்டு ராணுவம் மற்றும் பயங்கரவாத குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து உளவுத் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள லுானி, புட்வால், தைப்பு போஸ்ட், ஜமிலா போஸ்ட், உம்ரான்வாலி, சாப்ரார், பார்வர்ட் கஹுதா, சோட்டா சக் மற்றும் ஜங்லோரா பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தட்பவெப்ப காலநிலையை சமாளிக்கும் 'இமேஜர்'கள், இலைகளை ஊடுருவிச் செல்லும் 'ரேடார்' மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களை பொருத்தும் பணியும் நடந்து வருகிறது. ரகசிய கூட்டம்
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கெல், ஷார்டி, துத்னியல், அத்முகாம், ஜூரா, லீபா பள்ளத்தாக்கு, பச்சிபன் சாமன், தந்த்பானி, நையாலி, ஜான்கோட், சகோட்டி, நிகைல், பார்வர்ட் கஹுதா ஆகிய 13 இடங்களில் ஏவுதளங்களை அமைக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கூடுதலாக, சர்வதேச எல்லையில் மஸ்ரூர் படா பாய், சாப்ரார், லுானி மற்றும் ஷகர்கரில் நான்கு சர்வதேச ஏவுதளமும், ஒரு ட்ரோன் மையமும் அமைக்க பாக்., முடிவு செய்துள்ளது. ஒரே இடத்தில் பயங்கரவாதிகள் மொத்தமாக இருப்பதை தவிர்க்கும் வகையில், சிறு சிறு முகாம்கள் அமைக்கவும் அந்நாட்டு ராணுவம் திட்டமிட்டுள்ளது. இந்த முகாம்களில் ரேடார்கள், ட்ரோன் எதிர்ப்பு கருவி உள்ளிட்டவற்றையும் நிறுவும் பணிகளும் நடந்து வருகின்றன.தாக்குதல் நடத்தப்பட்ட பஹவல்பூரில், சமீபத்தில் பாக்., ராணுவம் தலைமையில் ரகசிய உயர்மட்ட கூட்டம் நடந்தது. இதில், லஷ்கர், ஜெய்ஷ், ஹிஜ்புல், 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' ஆகிய பயங்கரவாத குழுக்களின் தளபதிகள் மற்றும் பாக்., உளவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதையடுத்தே, அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களை சீரமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.