பஞ்சமசாலி விவகாரத்தால் முதல்வருக்கு... சிக்கல்! இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு கிளம்புவதால் குழப்பம்
பெங்களூரு: பஞ்சமசாலி சமூகத்திற்கு '2ஏ' இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில், முதல்வர் சித்தராமையாவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் கூட்டமைப்பினர் முதல்வரிடம் மனு அளித்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.கர்நாடகாவின் வட மாவட்டங்களில் லிங்காயத் சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர். இந்த சமூகத்தின் உட்பிரிவான பஞ்சமசாலி சமூகத்தினர் தங்களுக்கு '2ஏ' இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, முந்தைய பா.ஜ., ஆட்சியில் கோரிக்கை வைத்தனர்.மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமிகள் தலைமையில் பாகல்கோட்டில் இருந்து பெங்களூருக்கு பஞ்சமசாலி சமூகத்தினர் பேரணி நடத்தினர். அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் மனுவும் கொடுத்தனர்.ஆனால் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அவர் எந்த உறுதியும் அளிக்காததால், இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பெங்களூரில் 100 நாட்களுக்கும் மேலாக மடாதிபதி தலைமையில் பஞ்சமசாலி சமூகத்தினர் போராட்டமும் நடத்தினர். முன்னேற்றம் இல்லை
அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஞ்சமசாலி சமூகத்திற்கு '2ஏ' இட ஒதுக்கீடு வழங்குவோம்' என வாக்குறுதி அளித்தது. இதனால் சட்டசபை தேர்தலுக்கு முன்பு பஞ்சமசாலி சமூகத்திற்கு '2டி' இடஒதுக்கீடு வழங்குவதாக பா.ஜ., அரசு அறிவித்தது.இதை பஞ்சமசாலி சமூகத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டசபை தேர்தலில் காங்கிரசை ஆதரித்து வெற்றி பெற செய்தனர்.ஆனால் ஆட்சிக்கு வந்த பின் '2ஏ' இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சித்தராமையா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மடாதிபதி தலைமையில் பஞ்சமசாலி சமூகத்தினர் பல முறை முதல்வரை சந்தித்தும் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை. மடாதிபதி ஆவேசம்
இதையடுத்து, 'பெலகாவியில் நடக்கும் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரின்போது, சுவர்ண விதான் சவுதாவை டிராக்டரில் பேரணியாக வந்து முற்றுகையிடுவோம்' என, மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமிகள் அறிவித்திருந்தார்.அதன்படி நேற்று முன்தினம் சுவர்ண விதான் சவுதா அருகே பஞ்சமசாலி சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வட மாவட்டங்களில் உள்ள ஊர்களில் இருந்து ஏராளமானோர் டிராக்டர்களில் வந்தனர். டிராக்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். போராட்ட களத்தில் இருந்த மடாதிபதி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.''உங்களால் எங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க முடியாவிட்டால் இப்போதே சொல்லிவிடுங்கள். 2028 சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சியை ஆதரித்து இட ஒதுக்கீடு வாங்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்,'' என மடாதிபதி ஆவேசமாக கூறினார். இது சித்தராமையாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.மற்றொரு புறம் அவருக்கு புதிய நெருக்கடி உருவாகி உள்ளது. அதாவது பெங்களூரில் சித்தராமையாவை நேற்று பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேசினர். அப்போது முதல்வரிடம் அவர்கள் மனு ஒன்றை வழங்கினர்மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:பஞ்சமசாலி சமூகத்தினர் அரசு ஆணை 2ன் படி பிரிவு 3பி இடஒதுக்கீடு பெறுகின்றனர். ஆனாலும் கடந்த பா.ஜ., ஆட்சியில் 2ஏ இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தினர். இதனால் முஸ்லிம்களுக்கு இருந்த 4 சதவீதம் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, புதிதாக '2சி, 2டி' இடஒதுக்கீடு உருவாக்கப்பட்டு பஞ்சமசாலி சமூகத்திற்கு '2டி' இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.பா.ஜ., அரசின் உத்தரவை எதிர்த்து, முஸ்லிம் சமூகத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். வழக்கு விசாரணையின்போது முந்தைய இட ஒதுக்கீடு உத்தரவை கடைபிடிப்போம் என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.பஞ்சமசாலி சமூகம் கல்வி, பொருளாதாரம், அரசியல் ரீதியாக முன்னேறி உள்ளது. டாக்டர் நாககவுடா கமிட்டி, வெங்கடசாமி கமிட்டி, நீதிபதி சின்னப்பரெட்டி கமிட்டி அறிக்கைகளில், பஞ்சமசாலி முன்னேறிய சமூகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பஞ்சமசாலி சமூகத்திற்கு '2ஏ' இட ஒதுக்கீடு கொடுத்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட அகசா, சபிதா சமாஜ், திக்ளா, இதிகா, குருபா உள்ளிட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்காது. இதையும் மீறி இடஒதுக்கீடு கொடுத்தால் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.