உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி., பொது கணக்கு குழு கூட்டத்துக்கு ஆஜராகாமல் செபி தலைவர் ஆப்சென்ட் பா.ஜ., - எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வாக்குவாதம்

பார்லி., பொது கணக்கு குழு கூட்டத்துக்கு ஆஜராகாமல் செபி தலைவர் ஆப்சென்ட் பா.ஜ., - எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வாக்குவாதம்

பார்லிமென்ட் பொது கணக்கு குழு கூட்டத்திற்கு ஆஜராகி விளக்கமளிப்பதை, 'செபி' அமைப்பின் தலைவர் தவிர்த்ததால், பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.பங்கு சந்தையை கட்டுப்படுத்தும், 'செபி' அமைப்பின் தலைவராக இருக்கும் மாதவி புஜ் மீது, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தது.

எதிர்பார்ப்பு

அவர் 'செபி' தலைவராக இருந்துகொண்டே, வேறு சில முக்கிய தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக பணியாற்றி, அதன் வாயிலாக ஆதாயம் அடைந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.இவை அனைத்தையும் மாதவி மறுத்து வந்த நிலையில், காங்கிரஸ் மூத்த எம்.பி.,யான கே.சி.வேணுகோபால் தலைமையிலான பார்லிமென்ட் பொது கணக்கு குழு, 'செபி அமைப்பின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு' என்ற தலைப்பில், அதன் தலைவர் என்ற முறையில், சம்மன் அனுப்பியது. பார்லிமென்ட் அலுவலகத்தில் பொது கணக்கு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. சம்மனை ஏற்று, இந்த கூட்டத்தில் மாதவி ஆஜராவார் என்ற எதிர்பார்ப்பு காலை முதலே இருந்து வந்த நிலையில், திடீர் திருப்பம் நிகழ்ந்தது.கூட்டம் துவங்கியதும், கே.சி.வேணுகோபால் ஒரு குறிப்பை வாசிக்கத் துவங்கினார். செபி தலைவர் குறித்த செய்தி என்றதும் பெரும் அமளி ஏற்பட்டது. பா.ஜ., உள்ளிட்ட தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் கடும் கூச்சல் போட்டனர்.'சம்மன் அனுப்பியது தவறு. ஒரு அரசியல் கட்சியின் ஆசைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், செபி தலைவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதை ஏற்க மாட்டோம்' என்று வாதிடவே, கூச்சல் குழப்பம் அதிகரித்தது.

சொந்த காரணம்

இந்த அமளியை அடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துவிட்டு, பொது கணக்கு குழு தலைவர் கே.சி.வேணுகோபாலும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.வெளியில் வந்த கே.சி.வேணுகோபால், “செபி அமைப்பு குறித்த ஆய்வுக்காக அந்த அமைப்பின் தலைவர் மாதவிக்கு சம்மன் அனுப்பப்பட்டபோது, குழு முன்பு ஆஜராவதிலிருந்து தமக்கு விலக்கு அளிக்குமாறு கேட்டார்; அதற்கு மறுப்பு தெரிவித்தோம். இதையடுத்து, அவர் குழுவின் அழைப்பை ஏற்று வருவதாக உறுதியளித்து கடிதமும் தந்திருந்தார்.“ஆனால், காலை 9:30 மணிக்கு என்னை தொடர்பு கொண்டு, 'தனிப்பட்ட காரணங்களால் மும்பையிலிருந்து கிளம்ப முடியாத சூழ்நிலையில் இருப்பதால், கூட்டத்தில் பங்கேற்க இயலாது' என்று தகவல் தெரிவித்தார். “அவரது சொந்த காரணங்கள் என்பதோடு, ஒரு பெண் என்பதாலும், அவர் சூழ்நிலை கருதி, இந்த வேண்டுகோளை இந்த முறை ஏற்றுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் அடுத்த கூட்டத்திற்கு வந்து ஆஜராகும்படியும் அவரிடம் அறிவுறுத்திஉள்ளோம்,” என்றார்.

சபாநாயகரிடம் புகார்

மாதவி குறித்து கே.சி.வேணுகோபால் வெளியில் பேசியதை கேள்வி பட்டு கடும் அதிருப்தி அடைந்த பொதுக்கணக்கு குழு உறுப்பினரும், பா.ஜ., மூத்த எம்.பி.,யுமான ரவிசங்கர் பிரசாத், “வேணுகோபால் எல்லை மீறி பேசுகிறார். கூட்டத்தில் பேச வேண்டிய விபரங்களை வெளியில் சென்று பேசுவது விதிகளுக்கு முரணானது.''மிக முக்கிய குழுவின் தலைவர், பொறுப்பற்ற முறையில் செயல்படுவது நல்லதல்ல. ஏதோ ஒரு அரசியல் உள்நோக்கத்துடன் அவர் செயல்படுகிறார் என்பது தெரிகிறது,” என்றார். பின்னர், பா.ஜ., எம்.பி.,க்கள் அனைவரும், ரவிசங்கர் பிரசாத் தலைமையில் பார்லிமென்ட் புது கட்டடத்திற்கு சென்று, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து புகார் அளித்தனர்.- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி