உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லிமென்ட், சட்டசபைக்கு ஒரே தேர்தல்!

பார்லிமென்ட், சட்டசபைக்கு ஒரே தேர்தல்!

புதுடில்லி : பார்லிமென்டுக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும், 'ஒரே நாடு - ஒரே தேர்தல்' முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக சட்டத்தை விரைவில் கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.லோக்சபா, மாநில சட்டசபைகள், மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகள், பரிந்துரைகள், கருத்துக்களை பெற்றது. இதன் அடிப்படையில் தன் அறிக்கையை, இந்தக் குழு, கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்தது.மத்தியில் ஆளும் பா.ஜ.,வும் தன் தேர்தல் வாக்குறுதிகளில், ஒரே நாடு - ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவோம் என்று அறிவித்தது. சமீபத்தில் சுதந்திர தின உரையின்போதும், பிரதமர் நரேந்திர மோடி இதை வலியுறுத்தினார்.

எதிர்பார்ப்பு

'பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சிக்குள் இதை நடைமுறைப்படுத்துவோம்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் கூறியிருந்தார்.இந்நிலையில், ஒரே நாடு - ஒரே தேர்தல் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.இதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் துவங்கும். வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரிலேயே, இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அமைச்சரவையின் முடிவுகள் குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறியதாவது:இத்திட்டத்தைச் செயல்படுத்தவது தொடர்பாக, நாடு முழுதும் அடுத்த சில மாதங்களில் விரிவாக விவாதிக்கப்படும்.இந்த முறைக்கு பல்வேறு கட்சிகள், பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்; ஒரு சில கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. இந்தக் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் இந்த முறை குறித்து விரிவாக விவாதிப்போம். அனைத்து தரப்பினரின் முழு ஆதரவைப் பெற முயற்சிப்போம். அதைத் தொடர்ந்து, இது தொடர்பான மசோதா தயாரிக்கப்பட்டு, அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும். அதன்பிறகே, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்.இந்த ஆட்சியின் பதவி காலத்துக்குள் இதை நடைமுறைப்படுத்துவோம் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் கூறியுள்ளார். அதனால், வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படுமா என்பதை தற்போது கூற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

வாக்காளர் பட்டியல்

ஒரே நாடு - ஒரே தேர்தல் குழு அளித்துள்ள பரிந்துரைகளில், இரண்டு கட்டங்களாக இதை செயல்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. முதலில் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்திலும், அது முடிந்த 100 நாட்களில், மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தலாம் என, கூறப்பட்டுள்ளது.மேலும், நாடு முழுதும் ஒரே பொதுவான வாக்காளர் பட்டியல் வெளியிடவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களின்போது தலைமை தேர்தல் கமிஷனும், உள்ளாட்சித் தேர்தல்களில், மாநில தேர்தல் கமிஷன்களும் வாக்காளர் பட்டியலை வெளியிடுகின்றன.இந்தக் குழு அளித்துள்ள பரிந்துரையில், அரசியலமைப்புச்சட்டத்தில், 18 திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவற்றுக்கு, மாநில சட்டசபைகளின் ஒப்புதல் தேவையில்லை. அதே நேரத்தில், பெரும்பாலான திருத்தங்களுக்கு பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய வேண்டும்.இதற்கிடையே சட்டக் கமிஷனும், ஒரே நாடு - ஒரே தேர்தல் நடைமுறை தொடர்பான தன் அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டக் கமிஷனின் தகவலின்படி, 2029ல் இருந்து இதை நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், தொங்கு சட்டசபை அமைந்தால், அதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பாகவும் பரிந்துரை செய்யப்படும்.

தேர்தல் நடக்க வேண்டிய மாநிலங்கள்

நம் நாட்டில், 1951 முதல் 1967 வரை ஒரே நேரத்திலேயே தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின், பல்வேறு காரணங்களில் தேர்தல் நடைபெறும் காலம் மாறியது.ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது மிகப் பெரும் சவாலானது. சில மாநிலங்கள், அதன் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக தேர்தலை சந்திக்க நேரிடும். அதே நேரத்தில் சில மாநிலங்களில் பதவிக் காலம் முடிந்தப் பிறகும், சிறிது காத்திருக்க நேரிடும்.லோக்சபாவுக்கு மே, ஜூன் மாதங்களில் தேர்தல் நடக்கும். சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலின்போது, ஒடிசா, ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தலும் நடந்தது.தற்போது ஜம்மு - காஷ்மீர், ஹரியானாவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்கள், இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளன.டில்லி, பீஹாரில், 2025ல் தேர்தல் நடக்க உள்ளது. அசாம், கேரளா, தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி சட்டசபைகளின் பதவிக் காலம், 2026ல் முடிகிறது. கோவா, குஜராத், மணிப்பூர், பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் சட்டசபைகளின் பதவிக் காலம், 2027ல் முடிகிறது.ஹிமாச்சல், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, தெலுங்கானாவில், 2028லும், லோக்சபா மற்றும் அதனுடன் தேர்தல் நடந்த மாநிலங்களில், 2029லிலும் பதவிக் காலம் முடிகிறது.'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்துக்கான உயர்மட்டக் குழுவை வழிநடத்திய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நம் ஜனநாயகத்தை துடிப்பாக மாற்ற, இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த முயற்சி.- நரேந்திர மோடி, பிரதமர்ஒரே நாடு; ஒரே தேர்தல் நம் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்லும். பிரதமர் மோடியின் திடமான எண்ணத்தை இது பிரதிபலிக்கிறது. இதன் வாயிலாக, நம் ஜனநாயகம் துாய்மைப்படுத்தப்படும். தேர்தல் செலவீனங்கள் குறைக்கப்பட்டு, இதர திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கூடிய சூழல் ஏற்படும். இது, நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும்.- அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை மதிப்பிட அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த, டில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, கோல்கட்டா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜி.சி.குப்தா, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இவர்கள் குறிப்பிடுகையில், 'இந்த திட்டம், மாநில அளவில் ஆட்சி அமைப்பதில் குழப்பங்களை ஏற்படுத்தும். இதுதவிர, ஜனநாயக முறையை சிதைப்பதுடன் அதன் கோட்பாடுகளுக்கு எதிரானது' என, குறிப்பிட்டனர்.தமிழக முன்னாள் தேர்தல் கமிஷனர் வி.பழனிகுமார் குறிப்பிடுகையில், ''ஒரே நாடு; ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தல் காலங்களில் உள்ளூர் பிரச்னைகளை விட தேசிய பிரச்னைகள் மட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். இது, மாநில அரசுகளை மழுங்கடிக்கக்கூடிய செயல்,'' என, சுட்டிக்காட்டியுள்ளார்.

சாத்தியமில்லை: கார்கே

இது குறித்து, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளதாவது:ஒரே நாடு - ஒரே தேர்தல் சாத்தியமில்லை; செயல்படுத்தவும் முடியாது. ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்தால், இதுபோன்ற பிரச்னைகளை எழுப்பி, மக்களை திசை திருப்புவது பா.ஜ.,வின் தந்திரம்.இந்த முயற்சி, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. நாட்டின் ஜனநாயகத்துக்கு, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. அதனால் இதை நாடு ஏற்காது.இவ்வாறு அவர் கூறினார்.''உண்மையில் இந்த முறையில் பா.ஜ., தீவிரமாக இருந்திருந்தால், ஜம்மு - காஷ்மீர், ஹரியானா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்டுக்கு ஏன் ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தலை நடத்தவில்லை?'' என, காங்., மூத்த தலைவர் டி.எஸ். சிங் தியோ கேள்வி எழுப்பியுள்ளார்.மற்றொரு மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் கூறுகையில், ''ஒவ்வொரு மாநிலமாக பா.ஜ., இழந்து வருகிறது. விரைவில் மத்தியில் ஆளும் கூட்டணியும் முடிவுக்கு வரவுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள விரக்தியில், இதுபோன்ற விபரீத முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது,'' என்றார்.

முக்கிய பரிந்துரைகள்!

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அளித்துள்ள 10 பரிந்துரைகள்:* ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு, சட்ட ரீதியிலான முறைகளை உருவாக்க வேண்டும்.* முதல் கட்டமாக, லோக்சபா மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம்.* அதற்கடுத்த, 100 நாட்களில் மாநகராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தலாம்.* லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக, தேர்தல் முடிந்து லோக்சபா முதல் முறையாக கூடும் தேதியை, நிர்ணயிக்கப்பட்ட தேதியாக ஜனாதிபதி அறிவிக்கலாம்.* இந்த நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு பின் மற்றும் லோக்சபாவின் முழு பதவிக் காலம் முடிவதற்கு முன் நிறுவப்படும் சட்டசபைகள், அந்த நிர்ணயிக்கப்பட்ட தேதி வரையிலேயே இருக்கும். இந்த மாற்றம் ஒருமுறை மட்டும் செய்யப்படும். அதன்பின், ஒரே நேரத்தில், லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த முடியும்.* யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு சட்டசபை, நம்பிக்கையில்லா தீர்மானம் போன்றவை காரணமாக லோக்சபா முன்னதாகவே கலைக்கப்பட்டால், மீண்டும் புதிதாக தேர்தல் நடத்தலாம்.* அதே நேரத்தில் இந்த புதிய லோக்சபாவின் பதவிக்காலம், கலைக்கப்பட்ட லோக்சபாவின் மீதமுள்ள பதவிக் காலம் வரை மட்டுமே இருக்கும்.* மாநில சட்டசபைகளுக்கு இதுபோல் இடையில் புதிதாக தேர்தல் நடத்தப்பட்டால், லோக்சபாவின் பதவிக்காலம் முடியும் வரை மட்டுமே அதன் பதவிக் காலமும் இருக்கும்.* ஒரே வாக்காளர் பட்டியல், ஒரே தேர்தல் அடையாள அட்டை முறைகளை, மாநில தேர்தல் கமிஷன்களுடன் இணைந்து, தலைமை தேர்தல் கமிஷன் உருவாக்க வேண்டும் .* ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு வசதியாக, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களின் தேவை, அவற்றை நாட்டின் பல பகுதிகளுக்கு அனுப்புதல், தேவையான தேர்தல் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்டவை தொடர்பாக, தேர்தல் கமிஷன் முன்னதாகவே விரிவான திட்டத்தை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

MADHAVAN
செப் 20, 2024 08:34

அடேய் உங்க பிஜேபி கட்சியே இன்னும் கொஞ்சம் நாள்ல கலையப்போகுது


ManiK
செப் 19, 2024 20:29

Super திட்டம். சட்டமாக தாக்கல் செய்யும்முன் மக்கள்கிட்ட last 20 yearsல நடந்த தேர்தல் தேதி, ஆன செலவு, இதர detailsஅ வெளியிடவும். With correct and convincing data எல்லா மக்களும் ஒத்துழைப்பார்கள்.


Velan Iyengaar
செப் 19, 2024 19:50

முத்திடிச்சி ...கீழ்ப்பாக்கத்துல ஒரு அட்மிஷன் போடவேண்டியது தான் பாக்கி


jayachandran soundrarajan
செப் 19, 2024 17:04

பிரியன் நீங்க யாரு, அங்கதான் இடைத்தேர்தல் வந்தால் அதன் ஆயுட் காலம் மீதமுள்ள காலம் மட்டுமேன்னு சொல்லுக்கு இல்லையா.


venkatan
செப் 19, 2024 14:11

உங்களுக்குள்ளேயே 10 பேர் கூடி கவுத்துறுவீங்க..குதிரை பேரம் நடத்துவீங்க..மாறி,மாறி ரெண்டு வருஷத்துக்குள்ளாறயே தேர்தல் அல்லாம் நடந்தா,நாங்க பலவாட்டி வோ ட் டு பொடனுமாக்கும்...ஹி..ஹி..அப்புறம் மறுபடி மொதல்லேர்ந்துண்ணு சொல்வீங்க..


Priyan
செப் 19, 2024 14:03

இது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினாலும் தேர்தலுக்கு பிறகு ஏதாவது மாநிலத்தின் ஆட்சி கலைந்தால் என்ன செய்வார்கள். அடுத்த பொது தேர்தல் வரும் வரை அந்த மாநிலங்களில் யார் ஆட்சி செய்வார்கள். நிர்வாக சிக்கல் என சொல்லிக்கொண்டு பாராளுமன்ற தேர்தலையே ஒரு மாதத்திற்கு மேல் நடத்தும் இவர்களால் எப்படி பாராளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற தேர்தலையும் ஒரே கால இடைவெளியில் நடத்தி முடிக்க முடியும். இது மாநிலங்களுக்கு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் அதிகாரத்தையும் ஒன்றும் இல்லாமல் செய்து அதிகாரம் முழுவதையும் மத்திய அரசே தங்கள் கைகளில் வைத்து கொள்ள செய்யும் சதியாகும். இதை அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்றிணைந்து சட்டம் நிறைவேறாமல் தடுப்பது மாநில நலன்களுக்கு மிக மிக முக்கியமான தேவையாகும்.


MUTHU
செப் 19, 2024 13:03

அப்படியே உள்ளாட்சி தேர்தல் நடத்துவதை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றிடுங்க எஜமான்.


Ms Mahadevan Mahadevan
செப் 19, 2024 11:32

மக்களின் கவனத்தை திசை திருப்பும் யுக்தி வேறு ஏதோ திட்டம் மக்களே உஷார்


Barakat Ali
செப் 19, 2024 12:50

மகாவிஷ்ணு விவகாரம் ..... கோவை ஹோட்டல் விவகாரம் ..... இதையெல்லாம் சொல்றீங்களா ????


R.PERUMALRAJA
செப் 19, 2024 11:32

ஒரே நாடு ஒரே நதிநீர் எல்லா நதியையும் ஒன்றாக இணைத்து என்பதும் கூட ஒற்றுமையின் வெளிப்பாடு , அதை கொண்டு வாருங்கள் முதலில் .


ஆரூர் ரங்
செப் 19, 2024 10:50

தனிப்பட்ட முறையில் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. ஏனெனில் MP, MLA மற்றும் ஊராட்சிகளின் பணிகளும் பொறுப்புகளும் வெவ்வேறானவை. 74 ஆண்டுகளாகியும் மக்களுக்கு இதனைப் புரியவைக்கவே இயலவில்லை. அதனால்தான் மாநில அரசின் பட்டியலிலுள்ள மதுவிலக்கை மத்திய அரசு கொண்டு வர வேண்டி போலி மாநாடு நடத்துகின்றனர். தெருவிளக்கு பிரச்சனைக்கு மத்திய அமைச்சரிடம் மனு அளிக்கின்ற கூத்து தொடர்கிறது. மக்களின் ஜனநாயக அறியாமை நீங்கும் வரை ஒரே காலக்கட்டத்தில் தேர்தல் அத்தியாவசியமானது. குடும்ப கார்பரேட் கட்சிகளுக்கு முடிவு கட்ட முடியும்.


Barakat Ali
செப் 19, 2024 14:41

ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை இப்படியும் சொல்றீங்க .... ஒரே காலக்கட்டத்தில் தேர்தல் அத்தியாவசியமானது. இப்படியும் சொல்றீங்க ..... என்னாச்சு ????