உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்ப் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது பார்லிமென்ட்

வக்ப் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது பார்லிமென்ட்

புதுடில்லி : ராஜ்யசபாவில், 17 மணி நேர காரசார விவாதத்துக்குப் பின் நேற்று முன்தினம் நள்ளிரவு நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்த மசோதாவுக்கு, பார்லிமென்ட் நேற்று ஒப்புதல் அளித்தது.முஸ்லிம்கள் தானமாக வழங்கும் சொத்துக்களை நிர்வகிக்கும் வக்ப் வாரிய சட்டங்களில், பல ஆண்டுகளுக்குப் பின் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டது. இதன் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ப் திருத்த மசோதா - 2025 லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேறியது.

ஓட்டெடுப்பு

லோக்சபாவில் கடந்த, 2ம் தேதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 13 மணி நேர விவாதத்துக்குப் பின் ஓட்டெடுப்பு நடந்தது. ஆதரவாக, 288 ஓட்டுகளும், எதிர்ப்பாக 232 ஓட்டுகளும் பதிவாகின. இதைத் தொடர்ந்து மசோதா நிறைவேறியது.ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் நடந்த 17 மணி நேர காரசார விவாதத்துக்குப் பின், 128 ஆதரவு ஓட்டுகளுடன் மசோதா நிறைவேறியது. 95 பேர் எதிர்த்து ஓட்டுபோட்டனர். இரு சபைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, வக்ப் திருத்த மசோதாவுக்கு பார்லிமென்ட் நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்ட அறிக்கை:வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்.நம் அரசியலமைப்பில் உள்ள கொள்கைகள், விதிகள் மற்றும் நடைமுறைகள் மீதான மோடி அரசின் அனைத்து தாக்குதல்களையும் உறுதியாக எதிர்ப்போம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பல தவறுகள்

காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ''சிறுபான்மையினரை துன்புறுத்துவதற்காகவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டது என்ற உணர்வு நாட்டில் நிலவுகிறது. ''லோக்சபாவில் 288 ஆதரவு, 232 எதிர்ப்பு ஓட்டுகளுடன் மசோதா நிறைவேறியதில் இருந்தே, அதில் பல தவறுகள் இருப்பது உறுதியாகிறது. இந்த மசோதா சரியானதாக இருக்கலாம்; யாருக்கும் நன்மையானதாக இருக்காது,'' என்றார்.இந்நிலையில், வக்ப் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக, காங்கிரஸ் எம்.பி., ஜாவேத், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் எம்.பி., அசாதுதீன் ஓவைசி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பிரதமர் மோடி வாழ்த்து

வக்ப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தி:வக்ப் திருத்த மசோதா பார்லிமென்டின் இருசபைகளிலும் நிறைவேற்றப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க திருப்புமுனை தருணம். நீண்டகாலமாக விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு, குரல் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு இந்த சட்டத்திருத்தம் நிச்சயம் உதவும்.வக்ப் வாரிய நிர்வாகம் பல ஆண்டுகளாகவே வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்பட்டு வந்தது. இது குறிப்பாக முஸ்லிம் பெண்கள், ஏழை முஸ்லிம்கள், பாஸ்மந்தா முஸ்லிம்களின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது. பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்;மக்களின் உரிமைகளை பாதுகாக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வரலாற்று விவாதம்

லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டத் தொடர்கள் காலை 11:00 மணிக்கு துவங்கி, மாலை 6:00 மணி வரை நடப்பது வழக்கம். விதிவிலக்காக சில மசோதாக்கள் தொடர்பான விவாதங்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து விடிய விடிய நீடித்ததும் உண்டு. அந்த வகையில் ராஜ்யசபாவில், 1981ல் நடந்த அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு மசோதா மீதான விவாதம் அதிகாலை 4:43 வரை, 17 மணி நேரம் நீடித்துள்ளது. லோக்சபாவில் 1993ல் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் மீதான விவாதம், 18 மணி நேரம், 35 நிமிடங்கள் நீடித்தது. 1998ல் ரயில்வே பட்ஜெட் விவாதம், 13 மணி நேரம் நடந்தது. இந்த வரலாற்று சாதனை வரிசையில் வக்ப் வாரிய மசோதா மீதான விவாதமும் இடம்பிடித்துள்ளது. இதன் மீது கடந்த 2ம் தேதி லோக்சபாவில் நடந்த விவாதம் 14 மணி நேரம் நீடித்தது.ராஜ்யசபாவில் 17 மணி நேரம் நீடித்த விவாதம் அதிகாலை 4:02 மணிக்கு நிறைவடைந்தது.

சோனியாவுக்கு கண்டிப்பு

காங்கிரஸ் எம்.பி.,க்கள் கூட்டத்தில், நேற்று முன்தினம் பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா, எந்த விதிகளையும் பின்பற்றாமல், புல்டோசர் வைத்து இடிப்பது போல, லோக்சபாவில் வக்ப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக குற்றஞ்சாட்டினார். இதை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, லோக்சபாவில் நேற்று எழுப்பினார். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது:தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் பேசிய பேச்சுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. வக்ப் மசோதா லோக்சபாவில் 13 மணி நேரம் விவாதிக்கப்பட்டு, பின் டிவிஷன் வாரியாக ஓட்டெடுப்பு நடத்தி முறைப்படி நிறைவேற்றப் பட்டுள்ளது.அப்படி இருக்கையில் ஒரு மூத்த உறுப்பினர் பார்லிமென்ட் நடவடிக்கை மீது பொருத்தமற்ற கருத்துகளை கூறுவது, பார்லிமென்ட் ஜனநாயக நடைமுறைக்கு ஏற்புடையதல்ல.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஏப் 05, 2025 20:13

வக்ப் திருத்த மசோதாவை போன்று ஹலால் திருத்த மசோதாவும் வேண்டும். இல்லையேல் ஹலால் முற்றிலும் தடை செய்யப்படவேண்டும்.


nagendhiran
ஏப் 05, 2025 06:21

கடைசி வரை இச்சட்ட திருத்தத்தால் என்ன பாதிப்புனு எவனாவது சொல்றானா பாருங்க? எங்க கோவிலுக்கு மட்டும் அறநிலைய துறை வைப்பீங்க? அனால் அவர்களுக்கு வழிமுறை கொண்டு வந்தாலே அரசியல் வாக்குக்காக எதிர்பீங்கல?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை