உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4 நாட்களுக்கு பின் எல்லை பகுதிகளில் அமைதி! குண்டு சத்தம் கேட்காததால் மக்கள் நிம்மதி

4 நாட்களுக்கு பின் எல்லை பகுதிகளில் அமைதி! குண்டு சத்தம் கேட்காததால் மக்கள் நிம்மதி

ஜம்மு: இந்தியா - பாக்., இடையேயான சண்டை முடிவுக்கு வந்த நிலையில், எல்லையோர மாநிலங்களான ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தானில், நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில், ஒன்பது இடங்களில் பயங்கரவாதிகளின் முகாம்களை நம் ராணுவம் அழித்தது. இதைத் தொடர்ந்து, இந்தியா - பாக்., இடையே மோதல் ஏற்பட்டது. எல்லையில் உள்ள ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில், பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களை நம் ராணுவத்தினர் முறியடித்தனர். கடந்த நான்கு நாட்களாக போர் பதற்றம் நீடித்த நிலையில், சண்டையை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் நேற்று முன்தினம் ஒப்புக் கொண்டன. எனினும், சில மணி நேரங்களிலேயே இதை பாக்., மீறியது. ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில், பாக்., ராணுவத்தினர் ட்ரோன் தாக்குதல் நடத்தினர். இதை நம் ராணுவத்தினர் இடைமறித்து அழித்தனர். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மேல் எந்த தாக்குதலும் நடக்கவில்லை என, நம் ராணுவத்தினர் தெரிவித்தனர்.இந்நிலையில், போர் நிறுத்தத்தை தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரில் இரவு முழுதும் அமைதியான சூழல் நிலவியது. எல்லையில் உள்ள பூஞ்ச், ரஜோரி உள்ளிட்ட மாவட்டங்களில் எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. பெரும்பாலான பகுதிகளில் நேற்று இயல்புநிலை திரும்பியது. இதே போல், எல்லையில் உள்ள பஞ்சாபின் அமிர்தசரஸ், ஜலந்தர் ஆகிய மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு அமைதியான சூழல் நிலவியது. ராஜஸ்தானின் ஜெய்சால்மர், பார்மர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், எந்த தாக்குதலும் நடக்கவில்லை. இந்த நான்கு மாநிலங்களிலும் கடைகள் ஓரளவு திறந்திருந்தன. குறைந்த அளவில் போக்குவரத்தும் இயங்கியது. நான்கு நாட்களுக்கு பின் குண்டு சத்தம் கேட்காததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

ராணுவ வீரர் உயிரிழப்பு

போர் நிறுத்தத்துக்கு முன், ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள விமானப்படை தளத்தை குறிவைத்து, ட்ரோன் வாயிலாக பாக்., ராணுவம் தாக்கியது. இதை நம் ராணுவத்தினர் இடைமறித்து தாக்கினர். எனினும், ட்ரோனின் ஒரு பகுதி தாக்கியதில், விமானப்படை தளத்தில் பணியில் இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த் ராணுவ வீரர் சுரேந்திர சிங் மோகா வீரமரணம் அடைந்தார்.இதற்கிடையே, பாக்., தாக்குதலில் வீரமரணம் அடைந்த ஜம்மு மாவட்ட வளர்ச்சி அதிகாரி ராஜ்குமார், எல்லை பாதுகாப்பு படை எஸ்.ஐ., முகமது இம்தியாஸ் ஆகியோரது உடல்கள், ஜம்முவில் முழு அரசு மரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை