உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி?: கவர்னர் ஒப்புதல் அளித்ததாக பரபரப்பு

கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி?: கவர்னர் ஒப்புதல் அளித்ததாக பரபரப்பு

புதுடில்லி: மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்க துணை நிலை கவர்னர் சக்சேனா ஒப்புதல் அளித்ததாக, நேற்று தகவல் வெளியானது. சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இது, டில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டில்லியில், முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது, 2021 - 2022 நிதியாண்டில் மதுபான விற்பனை தொடர்பான கொள்கை திருத்தப்பட்டது. இதில் மோசடிகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, சி.பி.ஐ., விசாரணைக்கு துணை நிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த கொள்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

விசாரணை

அதே நேரத்தில் விசாரணை தொடர்ந்தது. சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில், ஆம் ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.இதற்கிடையே, இந்த ஊழலில் நடந்த பண மோசடி தொடர்பாக, அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடமும் விசாரணை நடந்தது. இந்தாண்டு மார்ச் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த செப்டம்பரில் ஜாமினில் வெளியே வந்தார்.அதைத் தொடர்ந்து, தன் முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். 'சட்டசபைக்கு நடக்கும் தேர்தலில், மக்கள் அளிக்கும் தீர்ப்பை அடுத்தே மீண்டும் முதல்வர் பதவியை ஏற்பேன்' என, அவர் கூறியிருந்தார். இதையடுத்து, ஆதிஷி முதல்வரானார்.அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் விசாரணை துவங்கவில்லை. இந்நிலையில், 'அரசு பதவியில் இருப்பவர் மீது பண மோசடி வழக்கில் நடவடிக்கை எடுப்பதற்கு, துணை நிலை கவர்னரின் ஒப்புதல் பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதன்படி, கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கேட்டு, டில்லி தலைமை செயலருக்கு, அமலாக்கத் துறை கடிதம் எழுதியிருந்தது. தற்போது அதற்கு, துணை நிலை கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

நடவடிக்கை

சட்டசபைக்கு, அடுத்தாண்டு பிப்ரவரியில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்க துணை நிலை கவர்னர் அனுமதி அளித்துள்ளதாக வெளியான செய்தி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால், 'இதுபோன்று எந்த அனுமதியும் அளிக்கப்படவில்லை. திசை திருப்பும் நோக்கத்துடன் இந்தத் தகவல் பரப்பப்பட்டுள்ளது' என, ஆம் ஆத்மி கூறியுள்ளது. இது குறித்து டில்லி முதல்வர் ஆதிஷி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:அரவிந்த் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்திருந்தால், அந்த கடிதத்தை, துணை நிலை கவர்னர் ஏன் வெளியிடவில்லை?பிரச்னைகளை திசை திருப்பவதற்கு இதுபோன்ற பொய் செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. இதுபோன்ற சதி வேலைகளில் ஈடுபடுவதை பா.ஜ., நிறுத்த வேண்டும். உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.''அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய சர்ச்சைக்குரிய கருத்து பிரச்னையை திசை திருப்பவே இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன,'' என, மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.வசமாக மாட்டிக்கொண்டார்!மதுபான ஊழலில் அரவிந்த் கெஜ்ரிவால் கமிஷன் வாங்கினார் என்பதை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதால், அவர் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். அவர் டில்லியை நாசமாக்கியுள்ளார், கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்துள்ளார். உண்மை வெளிவரும் என்பதால், இந்த விசாரணையை வரவேற்கிறோம்.வீரேந்திர சச்தேவாடில்லி மாநிலத் தலைவர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ