தாஹோட் : “பயங்கரவாதம் என்ற நோயிலிருந்து பாகிஸ்தானை அந்நாட்டு மக்களால் மட்டுமே குணப்படுத்த முடியும். இதற்கு அந்நாட்டு இளைஞர்கள் முன்வர வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள வதோதராவில், ரயில்களுக்கான 9,000 குதிரைசக்தி திறன் உள்ள இன்ஜின்கள் தயாரிக்கும் ஆலை உட்பட, 24,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பல திட்டங்களையும், வந்தே பாரத் உட்பட பல ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். இதையடுத்து நடந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பேசியதாவது:'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் நடந்தது, வெறும் ராணுவ நடவடிக்கை அல்ல. மக்களின் உணர்வுகள், கொந்தளிப்பின் வெளிப்பாடு.நம் சகோதரியர், நெற்றி வகிடில் வைக்கும் குங்குமமான சிந்துாரை அழிக்கும் நோக்கோடு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும்போது, நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்?அவ்வாறு செய்யத் துணிந்தவர்கள் அழிக்கப்பட வேண்டும். இதுபோன்ற ஒரு பதிலடி கிடைக்கும் என்று, பயங்கரவாதிகள் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டர்.இதுபோன்ற ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே, நாட்டின் பிரதம சேவகனாக என்னை, 2014ல் மக்கள் தேர்ந்தெடுத்தனர்.நம் படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்தோம். இத்தனை ஆண்டுகளாக உலகம் பார்த்திராத ஒரு வீரதீர செயலை நம் படைகள் மிகவும் துல்லியமாக செய்து காட்டின.நம் நாடு சுதந்திரம் பெற்றபோது ஏற்பட்ட பிரிவினையில் உருவானது பாகிஸ்தான். அதில் இருந்து, நம் நாட்டின் மீது வெறுப்புடனேயே அது இருந்து வருகிறது. எந்தெந்த வகையில், இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதை மட்டுமே அவர்கள் சிந்தித்து வருகின்றனர்.பாக்., குடிமக்களிடம் நான் கேட்க விரும்புவது என்னவென்றால், பயங்கரவாதத்தால் உங்களுக்கு கிடைத்தது என்ன? எதுவும் கிடைக்கவில்லை. உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா தற்போது உள்ளது. ஆனால் பாக்., எந்த இடத்தில் உள்ளது? பயங்கரவாதம் என்ற நோயிலிருந்து பாகிஸ்தானை அந்நாட்டு மக்களால் மட்டுமே குணப்படுத்த முடியும்.இதற்கு அந்நாட்டு இளைஞர்கள் முன்வர வேண்டும். அமைதியான வாழ்க்கை வாழுங்கள்; இல்லையெனில், என் தோட்டாக்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
'ரோடு ஷோ'வில் பங்கேற்ற
ஸோபியா குடும்பத்தினர்குஜராத்தின் வதோதராவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் இருந்து விமானப்படை தளம் வரை பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த 'ரோடு ஷோ'வில், சாலையின் இரு பக்கங்களிலும் குவிந்திருந்த மக்கள், மலர் துாவி பிரதமரை வரவேற்றனர். ஆப்பரேஷன் சிந்துார் தொடர்பாக விளக்கம் அளித்த ராணுவ கர்னல் ஸோபியா குரேஷியின் குடும்பத்தாரும், இதில் பங்கேற்றனர்.பிரதமருக்கு அவர்கள் வணக்கம் தெரிவித்தனர். பதிலுக்கு, பிரதமர் மோடி வணக்கம் தெரிவித்தார். இது தங்களுக்கு பெருமை அளிப்பதாக, ஸோபியாவின் பெற்றோர், சகோதரி, சகோதரர் குறிப்பிட்டனர்.