ஜாதியின் பெயரால் விஷத்தை விதைக்கின்றனர் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி ஆவேசம்
புதுடில்லி: ''நாட்டில் ஒவ்வொருவரும் வளர்ச்சியின் பலனை அனுபவித்து, வளர்ந்த நாட்டை உருவாக்க உழைக்கும் நேரத்தில், ஜாதியின் பெயரால் சிலர் விஷத்தை விதைக்க பார்க்கின்றனர்.''இந்த சதியை முறியடித்து, நம் கிராமங்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பேணி காத்து, வளர்ந்த நாடு என்ற இலக்கை எட்டுவோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். திருவிழா
கிராமங்களின் பாரம்பரியம், கலாசாரம், தொழில் வளர்ச்சியை வெளிக்காட்டும் வகையில், 'கிராமிய பாரத மஹோத்சவ்' என்ற பெயரில், ஜன., 4 முதல் 9ம் தேதி வரை, நாடு முழுதும் திருவிழாக்களை நடத்துகிறது மத்திய அரசு. நாட்டின் வளர்ச்சியில் கிராமங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள், பயிலரங்குகள் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன.கிராமிய பாரத மஹோத்சவ் நிகழ்ச்சிகளை டில்லியில் நேற்று துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை விமர்சிக்கும் வகையில், அவர் பேசியதாவது:கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்பதை உணர்ந்தே, கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்த, 10 ஆண்டுகளாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், அவர்களது வருவாயை பெருக்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஒன்றிணைவோம்
கிராம மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதே இந்த அரசின் முன்னுரிமை; அதற்கேற்பவே பல திட்டங்கள், பொருளாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக, கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதை தடுத்து வருகிறோம். அதற்காக, கிராமங்களில் பல புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம்.ஆனால், ஜாதியின் பெயரால் மக்களை பிளவு படுத்தும் விஷத்தை சிலர் விதைத்து வருகின்றனர். இந்த சதித் திட்டத்தை முறியடித்து, நம் கிராமங்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கட்டிக் காக்க அனைவரும் ஒன்றிணைவோம்.இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் சார்பில் மலர் போர்வை!
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள புகழ்பெற்ற தர்காவில், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சூபி அறிஞரான காஜா மொய்னுதீன் சிஸ்தியின் நினைவிடம் உள்ளது. உலகம் முழுதும் உள்ள முஸ்லிம்களால், காஜா கரிபுன் நவாஸ் என அழைக்கப்படும் அவரது நினைவு தினத்தையொட்டி, உருஸ் எனப்படும் சந்தனக் கூடு விழா நேற்று நடந்தது.இதில், பிரதமர் நரேந்திர மோடி சார்பில், 'சதார்' எனப்படும் மலர் போர்வை வழங்கப்பட்டது. அதை, அஜ்மீர் தர்கா நிர்வாகத்திடம், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒப்படைத்தார்.