ஒட்டகங்கள் வாயிலாக மது கடத்தல் நள்ளிரவில் போலீசார் வேட்டை கடத்திய ஐந்து பேர் சிக்கினர்
புதுடில்லி:போலீஸ் கண்ணில் மண்ணை துாவி, ஒட்டகங்கள் வாயிலாக நள்ளிரவு வேளையில் மது கடத்திய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மது கடத்தலுக்கு பயன்படுத்திய மூன்று ஒட்டகங்கள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டில்லியில் போலி மதுபானங்கள் மற்றும் வெளிநாட்டு மது பானங்கள் கடத்தல் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு, கடத்திச் செல்பவர்கள் போலீஸ் பிடியில் சிக்குகின்றனர். இதனால், லட்சக்கணக்கான மதிப்பிலான மதுபானங்கள் மற்றும் வாகனங்கள் போலீசில் பிடிபடுகின்றன. இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க, நள்ளிரவில் ஒட்டகங்கள் வாயிலாக, காடுகள் வழியாக மதுபானங்கள் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு டில்லியில், மதுபானங்கள் கடத்திச் சென்ற மூன்று ஒட்டகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பழைய மரச்சாமான்கள் என்ற போர்வையில் மதுபானங்களை கடத்திய ஐந்து பேரை போலீசார் பிடித்துள்ளனர். மது பாட்டில்கள் அடங்கிய 42 பெட்டிகளை ஒட்டகங்களின் முதுகில் அடுக்கி வைத்து, ரகசியமாக காடுகள் வழியாக பல பகுதி களுக்கு கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி, போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் ஒட்டகங்களும், அவற்றில் இருந்த மதுபானங்களும் சிக்கின. பெரும்பாலும் இரவு நேரங்களில் மட்டுமே இத்தகைய ஒட்டகங்களில் மதுபானங்கள் கடத்தப்படுவதாக போலீசார் கூறினர். வாழை இலைக்குள் மறைத்து
எடுத்து சென்ற கருங்காலி மரம்
பீஹாரை சேர்ந்த இருவர் கைது
நொய்டா:லாரியில் வாழை இலைகளுக்குள் மறைத்து எடுத்து செல்லப்பட்ட 55 குவிண்டால் கருங்காலி மரத் துண்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பீஹாரில் இருந்து டில்லிக்கு லாரியில் மறைத்து எடுத்துச் சென்ற இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கருங்காலி மரத்தை வெட்ட, டில்லி சுற்றுப்புறங்களில் தடை உள்ளது. அதனால், அந்த மரத்தின் தண்டுகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. அந்த மரத்தை டில்லி, ஹரியானா போன்ற மாநிலங்களில் திருட்டுத்தனமாக மருந்துகளில் பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது. எனவே, கருங்காலி மரத்தின் துண்டுகளை, வாழை இலைகளுக்குள் மறைத்து, பீஹாரிலிருந்து, டில்லிக்கு, லாரியில் எடுத்து வந்ததை கண்ட போலீசார், அந்த மரத்துண்டுகளையும், லாரியையும் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பீஹாரை சேர்ந்த ரவிந்திரா, 36, மற்றும் தாஜ் கான் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நீண்ட காலமாக இதுபோல கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டனர். கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட நபர் கைது புதுடில்லி:கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த நபர், கைது செய்யப்பட்டுள்ளார். அஷு என்ற நபர், மல்கா கஞ்ச் பகுதியில் உள்ள காய்கறி சந்தையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஒருவரை வெட்டி கொலை செய்ய முயன்றார். அவரை கைது செய்ய ஓராண்டாக போலீசார் பல முயற்சிகள் மேற்கொண்டனர். இந்நிலையில், ஐ.டி.பி.பி., பள்ளி அருகே பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக, அஷுவின் மூத்த சகோதரர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது அஷுவும் கைதாகியுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த கொலை முயற்சி வழக்கில் அவருக்கு இருந்த தொடர்பு அம்பலமானது. இளம்பெண் வாயில் 'ஆசிட்' ஊற்ற உதவிய பெண்ணுக்கு கோர்ட் ஜாமின் மறுப்பு புதுடில்லி:பெண் ஒருவர் வாயில் ஆசிட் போன்ற திரவத்தை ஊற்ற உதவிய பெண்ணுக்கு, ஜாமின் மறுத்துள்ள டில்லி உயர் நீதிமன்றம், 'அவர் புரிந்தது கொடுமையான குற்றம்' என கூறியுள்ளது. கடந்த 2018ல் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், இளம்பெண் ஒருவரை, இப்போது ஜாமின் கோரியுள்ள பெண் பிடித்துக் கொள்ள அவரின் கணவர், அந்த பெண்ணின் வாயில் ஆசிட் போன்ற திரவத்தை ஊற்றினார் என கூறப்பட்டது. அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எட்டாண்டுகளாக தலைமறைவாக இருந்த பெண், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சுஷில் குமார் பிறப்பித்த உத்தரவில், 'ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ள அந்த பெண் செய்த குற்றம் மிகவும் கொடுமையானது. அவருக்கு ஜாமின் வழங்க முடியாது. மேலும், வேண்டும் என்றே இந்த வழக்கின் விசாரணைக்கு அவர் எட்டாண்டுகளாக ஆஜராகாமல் இருந்தது தெரிய வருவதால், அவருக்கு ஜாமின் மறுக்கப்படுகிறது' என உத்தரவிட்டார்.