முதியோருடன் வாரந்தோறும் உரையாட போலீசுக்கு உத்தரவு
புதுடில்லி:“முதியோருடன் வாராந்திர உரையாடல் கூட்டம் நடத்தி, அவர்களின் குறைகளைக் கேட்க வேண்டும்,” என, துணை நிலை கவர்னர் சக்சேனா, டில்லி மாநகரப் போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார்.கவர்னர் மாளிகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், 600க்கும் மேற்பட்ட முதியோருடன் துணைநிலை கவர்னர் சக்சேனா உரையாடினார்.இதைத் தொடர்ந்து, சமூக வலைதளத்தில் சக்சேனா வெளியிட்டுள்ள பதிவு:டில்லி மாநகரப் போலீஸ் அதிகாரிகள், முதியோருடன் வாரந்தோறும் உரையாடல் நடத்த வேண்டும். இதற்கான அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலங்களிலும் இடம் ஒதுக்க வேண்டும். முதியோருக்கு பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். முதியோர் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க கலெக்டர் அலுவலகங்களில் பிரத்யேக உதவி மையங்கள் அமைக்க வேண்டும்.கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பல விஷங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டனர். சாலையில் தண்ணீர் தேங்குதல், வீடு மற்றும் பொது இடங்களில் துன்புறுத்தல், அரசு அலுவலகங்களில் அலைக்கழிப்பு, நடைபாதை ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெரிசல் மற்றும் தரமற்ற சாலைகள், சைபர் குற்றம் ஆகியவற்றால் முதியோர் பாதிக்கப்படுவதை கூறினர்.