உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் தேர்தல் களத்தில் போலீஸ் சிங்கங்கள்

பீஹார் தேர்தல் களத்தில் போலீஸ் சிங்கங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: போலீசில் திறம்பட பணியாற்றி 'சிங்கம்' என பெயர் எடுத்துள்ள இரண்டு அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.பீஹார் சட்டசபைக்கு நவ.,6 மற்றும் 11ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பல முக்கிய தலைவர்கள் வந்து பிரசாரம் செய்து வருகின்றனர்.இதற்கு இடையே இந்த தேர்தலில் இரண்டு பேர் கவனத்தை ஈர்த்துள்ளனர். இரண்டு பேருக்கும் 3 ஒற்றுமைகள் உள்ளன.அதில் முதலாவதாக இரண்டு பேரும் போலீசாக இருந்தவர்கள். சிறப்பான பணிக்காக, சிங்கம் என்ற பட்டப்பெயர் பெற்றவர்கள்.இரண்டாவதாக இரண்டு பேரும் போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் களமிறங்கி உள்ளனர்.கடைசியாக, இவர்களின் மனைவிகள் தொழிலதிபர்களாக உள்ளனர்.அந்த இருவரில் ஒருவர் ஷிவ்தீப் லாண்டே. இவர் முங்கர் மாவட்டத்தில் உள்ள ஜமல்பூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.மற்றொருவர் ஆனந்த் மிஸ்ரா. பாஜ வேட்பாளராக புக்சர் தொகுதியில் களம் காண்கிறார்.

ஷிவ்தீப் லாண்டே

இவர் மஹாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தைச் சேர்ந்தவர். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அம்மாநில நீர்வளத்துறை முன்னாள் அமைச்சர் விஜய் ஷிவ்தாரேவின் மகளான மம்தாவை திருமணம் செய்து கொண்டார்.எலெக்ட்ரிக்கல் பொறியியல் பிரிவல் பட்டம் பெற்ற இவர் ,2006ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். பீஹாரில் பணியாற்றிய போது பல அதிரடி நடவடிக்கைளை எடுத்தார். பாட்னா எஸ்பி ஆக இருந்த போது சாலையோரங்களில் நடக்கும் அத்துமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பெயர் பெற்றார். முங்கர், அராரியா, திர்ஹட் மாவட்ட டிஐஜி ஆகவும், புர்னியாவில் ஐஜி ஆகவும் பணியாற்றினார். கடந்த ஆண்டு பதவியை ராஜினாமா செய்த அவர் கடந்த மார்ச் மாதம் ஹிந்து சேனா கட்சியை துவக்கி தேர்தலில் களமிறங்கி உள்ளார்.தனது வேட்புமனுவில், தன் மீது எந்த கிரிமினல் வழக்குகளும் இல்லை. சொத்து ரூ. 20.74 லட்சம் எனவும், ஆண்டு வருமானம் ரூ.26.8 லட்சம் எனவும் தெரிவித்துள்ளார்.தொழிலதிபரான மனைவி பெயரில் ரூ.20.5 கோடி மதிப்பு அசையும் மற்றும் அசையா சொத்து உள்ளது. அதில் பல சொகுசு கார்கள், பல வங்கிக்கணக்குகளும் உள்ளன. மும்பை, புனேவில் குடியிருப்புகள், பண்ணை நிலம் ஆகியவை அடக்கம். அவர்களுக்கு கார் கடன் உட்பட ரூ.2.7 கோடிக்கு கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனந்த் மிஸ்ரா

பீஹாரின் பக்ச்ர மாவட்டத்தின் ஜிக்னா பகுதியில் பிறந்தவர். இவரது தந்தை கோல்கட்டாவில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனத்தில் பணியாற்றினார்.கோல்கட்டாவில் படித்த ஆனந்த் மிஸ்ரா, புனித சேவியர் கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றார். ஐ தராபாத்தின் ஒஸ்மானியா பல்கலையில் போலீஸ் நிர்வாகத்தில் பட்ட மேற்படிப்பு முடித்தார். 44 வயதான இவர் அசாம் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி. என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட், போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதற்காக ஜனாதிபதி, மாநில முதல்வர் விருது, உள்துறை அமைச்சகத்தின் பதக்கம் பெற்றார்.கடந்த லோக்சபா தேர்தலின் போது பதவியை ராஜினாமா செய்தார். பாஜவில் போட்டியிட முயற்சி செய்தும் வாய்ப்பு கிடைக்காததால் தனித்து போட்டியிட்டு 47 ஆயிரம் ஓட்டு பெற்றார். பிறகு பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். பிறகு மே மாதம் அக்கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார் பாட்னாவில் நடந்த மாணவர் போராட்டத்தில் பங்கேற்றதாக இவர் மீது வழக்கு உள்ளது.இவரது சொத்து மதிப்பு ரூ.2.5 கோடி. அதில் ரூ.60 லட்சம் அசையும் சொத்து அடக்கம். 100 கிராம் தங்கம், ரூ.2.51 லட்சம் மதிப்பு கொண்ட ராயல் என்பீல்டு பைக் மற்றும் மேற்கு வங்கத்தின் ஹூக்லி மாவட்டத்தில் ரூ.60 லட்சம் மதிப்பு கொண்ட வீடு உள்ளது. இவரது மனைவி அர்ச்சனா திவாரி பெயரில் ரூ.88.4 லட்சம் அசையும் சொத்து மற்றும் ரூ.17 லட்சம் மதிப்பு அசையா சொத்து உள்ளது. இரண்டு பேரும் வெற்றி பெறுவார்களா? யார் வெற்றி பெறுவார்? யார் தோல்வி அடைவார் என்பது போலீசார் மற்றும் பொது மக்கள் மத்தியில் விவாதமாக அங்கு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஜெய்ஹிந்த்புரம்
அக் 31, 2025 06:16

சிங்கமுங்கோன்னு வந்து அப்புறம் அசிங்கமா போச்சு குமாருன்னு சொல்லிட்டு 80 கோடிக்கு தோட்டம் வாங்கி வெவசாயம் பண்றேன்னு ஒருத்தர் அடங்கி விட்டார்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 31, 2025 01:55

இவர்களும் தேர்தலில் தோத்து, நண்பர்கள் தயவிலே குடும்பத்தை நடத்தி, அங்கே இங்கேன்னு ஆட்டையைப் போட்டு 80 கோடிக்கு தோட்டம் வாங்கி மாடு மேய்ச்சி பொழைக்க போயிடுவாங்களா?


Ramesh Sargam
அக் 30, 2025 23:44

இருவரும் வெற்றிபெற்று காவல்துறையில் எப்படி நேர்மையாக பணிபுரிந்தார்களோ, அதுபோல அரசியலிலும் பணிபுரியவேண்டும். வாழ்த்துக்கள் இருவருக்கும். அரசியலில் அவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை, ஊழலை ஒழிப்பது. அது சிறிது கடினமான பணிதான், பார்க்கலாம்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 31, 2025 06:18

நேர்மையா இருந்திருந்தால் பொண்டாட்டி பேரில் பல கோடி கணக்கில் சொத்து இருந்திருக்காது.


சமீபத்திய செய்தி