உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  திருப்பதி உண்டியல் திருட்டை விசாரித்த போலீஸ் அதிகாரி மர்ம மரணம்

 திருப்பதி உண்டியல் திருட்டை விசாரித்த போலீஸ் அதிகாரி மர்ம மரணம்

திருப்பதி: ஆந்திராவின் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உண்டியல் எண்ணும் பணியின்போது அரங்கேறிய ஊழல் குற்றச்சாட்டை விசாரித்த போலீஸ் அதிகாரி, அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக, அவரது சகோதரர் அளித்த புகாரின்படி, கொலை வழக்காக பதிவு செய்த ஆந்திர போலீஸ், 12 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு வை அமைத்துள்ளது. ஆந்திராவின் திருமலையில் உலக பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இங்கு, தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கண்காணிப்பு கேமரா இவர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகளை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பரகாமணி எனப்படும் உண்டியல் எண்ணும் மையத்தில் தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில், தன்னார்வலர்கள் பலர் எண்ணுவது வழக்கம். கடந்த, 2023ல், ஏப்ரலில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உண்டியல் எண்ணும் மையத்தில் உள்ள கண் காணிப்பு கேமரா பதிவுகள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தேவஸ்தானத்தின் தலைமை எழுத்தராக இருந்த ஜீயர் ரவிக்குமார் என்பவர், 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை திருடியது கண்டறியப்பட்டது. இது பற்றி திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பல ஆண்டுகளாக இதுபோன்ற கொள்ளை சம்பவத்தில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது. இவ்வழக் கில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் உதவி விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சதீஷ்குமார் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆரம்பகட்ட நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தார். இதற்கிடையே லோக் அதாலத் மூலம் குற்றச்சாட்டுக்குள்ளான ரவிக்குமார், தன்னிடம் உள்ள சொத்துகளை தானமாக அளித்து, தேவஸ்தான நிர்வாகத்துடன் சமரச தீர்வை ஏற்படுத்தினார். இந்நி லையில், லோக் அ தாலத் பிறப்பித்த உத்தரவு களை ரத்து செய்த ஆந்திர உயர் நீதிமன்றம், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சி.ஐ.டி., போலீசார் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு மறுவிசாரணை நடத்தி, வரும் டிசம்பர் 2ம் தேதிக்குள் சீலிடப்பட்ட உறையி ல் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, இவ்வழக்கு விசாரணையை தீவிரப்படுத்திய சி.ஐ.டி., போலீசார், சதீஷ் குமாரிடம் கடந்த 6ம் தேதி விசாரணை நடத்தியது. குற்றச்சாட்டு அப்போது அவர், லோக் அதாலத் மூலம் சமரச தீர்வு ஏற்பட போலீசாரின் அழுத்தம் தனக்கு இருந்ததாக சி.ஐ.டி., போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்ட விசாரணைக்கு ஆஜராக இருந்த சதீஷ் குமார், ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தின் தாடிபத்ரி அருகே ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக அவரது சகோதரர் ஹரி என்பவர், உண்டியல் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர், சதீஷ் குமாரை கொன்றதாக புகார் அளித்தார். இப்புகாரின்படி, குண்டக்கல் ரயில்வே போலீசார் கொலை வழக்காக பதிவு செய்ததுடன், 12 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
நவ 16, 2025 00:46

திருப்பதி கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும், பூஜை செய்யும் பூஜாரிகள் உட்பட வருடத்துக்கு ஒருமுறை மாற்றப்படவேண்டும். அங்கு மட்டுமல்ல, இந்தியாவில் வருமானம் வரும் மற்ற ஷீர்டி போன்ற கோவில்களிலும் அப்படி செய்யவேண்டும். கோவில் வருமானம், கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்படவேண்டும்.


புதிய வீடியோ