பரஸ்பரம் துப்பாக்கியால் சுட்டு அரசியல் பிரமுகர்கள் மோதல்
ஹரித்வார்,உத்தரகண்டில், பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., குன்வர் பிரணவ் சிங் சாம்பியனுக்கும், சுயேச்சை எம்.எல்.ஏ., உமேஷ் குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் அலுவலகம் மீது துப்பாக்கியால் சுட்டு, கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள கான்பூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், உமேஷ் குமார். சுயேச்சை எம்.எல்.ஏ., வான இவருக்கும், பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., குன்வர் பிரணவ் சிங் சாம்பியனுக்கும் இடையே, நீண்ட காலமாக பகை இருக்கிறது. இந்நிலையில், ஹரித்வாரின் ரூர்க்கியில் உள்ள உமேஷ் குமாரின் அலுவலகம் மீது, நேற்று முன்தினம் பட்டப்பகலில், குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் துப்பாக்கிச் சூடு நடத்தினார். மேலும், ஆதரவாளர்களோடு சேர்ந்து, அலுவலகம் மீது கற்களை வீசி அவர் தாக்குதல் நடத்தினார். இதனால் கோபமடைந்த உமேஷ் குமார், தன் ஆதரவாளர்களோடு சேர்ந்து, குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் அலுவலகம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, கற்களை வீசி தாக்கினார். இது தொடர்பாக இரு தரப்பினரும் போலீசில் பரஸ்பரம் புகார் அளித்தனர். இதன்படி, குன்வர் பிரணவ் சிங் சாம்பியன், உமேஷ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, தனித்தனி போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த 25ல், லந்தவுராவில் உள்ள மேன்சனை உமேஷ் குமார் தாக்கியதாகவும், இதற்காகவே, அவரது அலுவலகத்தை தாக்கியதாகவும் குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் கூறினார். இதை மறுத்த உமேஷ் குமார், தன் பெற்றோர் குறித்து சமூக வலைதளங்களில் குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் அவதுாறு பரப்பியதாகவும், அது குறித்து கேட்கவே அவரது வீட்டுக்கு சென்றதாகவும் குறிப்பிட்டார். இதற்கிடையே, இருவரின் துப்பாக்கியின் உரிமத்தை ரத்து செய்யும்படி மாவட்ட கலெக்டருக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.