கர்நாடகாவில் 13 ஆறுகளின் நீர் அசுத்தம் மாசு கட்டுப்பாடு வாரியம் திடுக் தகவல்
பெங்களூரு: நகர்ப்பகுதி மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் ஆறுகள் அசுத்தமடைந்துள்ளன. இவற்றின் நீர் பயன்படுத்த தகுதியாக இல்லை என்பதை, மாசு கட்டுப்பாடு வாரியம் கண்டறிந்துள்ளது.இதுதொடர்பாக, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:கர்நாடகாவில் காவிரி, கிருஷ்ணா உட்பட ஏழு முக்கியமான ஆறுகளை நோக்கி 20க்கும் மேற்பட்ட துணை ஆறுகள் பாய்கின்றன. 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆறுகள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தி ஆகின்றன. இந்த ஆறுகளில் 3,700 டி.எம்.சி.,க்கும் அதிகமான தண்ணீர் பாய்கிறது.ஆனால் இவற்றின் 13 ஆறுகளின் தண்ணீர் அசுத்தம் அடைந்துள்ளன. தொழிற்சாலைகள், வீடுகளின் கழிவுநீர் கலப்பதே, இதற்கு காரணம். இந்த தண்ணீர் நாம் பயன்படுத்த உகந்தது அல்ல. மத்திய, மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்களின் ஆய்வில், அர்க்காவதி ஆறு மிக அதிகமாக அசுத்தம் அடைந்துள்ளது.நாம் குடிக்க பயன்படுத்தும் நீரில், ஒரு லிட்டரில் பி.ஓ.டி., எனும் பயோகெமிக்கல் ஆக்சிஜன் டிமான்ட் அளவு, 5 மில்லி கிராம் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் அர்க்காவதியின் சில பகுதிகளில் பி.ஓ.டி., அளவு 30 கிராமுக்கும் அதிகமாக உள்ளது.பத்ரா, துங்கபத்ரா, சிம்ஷா ஆறுகளில் ஒவ்வொரு லிட்டர் நீரிலும், பி.ஓ.டி., அளவு 6 முதல் 10 மில்லி கிராம் உள்ளது. மற்ற ஆறுகளில் இதன் அளவு, 6 மில்லி கிராம் உள்ளது.தற்போதைய ஆய்வின்படி, மாநிலத்தின் 12 ஆறுகளின் 693.75 கி.மீ., பகுதிகள் அசுத்தம் அடைந்துள்ளன. 112 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை கட்டுப்படுத்தி, நீரை சுத்திகரிக்க வேண்டும். ஏற்கனவே 40 கழிவுநீர் சுத்திகரிப்பு யூனிட் அமைக்கப்பட்டுள்ளது. 195.75 எம்.எல்.டி., நீர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட 16 யூனிட்டுகள் அமைக்கும் பணி நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.