சம்பல்: பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமத்தில் ஆபாச, 'ரீல்ஸ் வீடியோ'க்களை பதிவிட்டு வந்த சகோதரியரை, போலீசார் கைது செய்து ஜாமினில் விடுவித்துள்ளனர்.உ.பி.,யின் சம்பல் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் ஷாபாஸ்பூர் கலான். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்த கிராமத்தில், தற்போதைய, '5ஜி' யுகத்திலும் பழமைவாதம் சற்று துாக்கலாகவே காணப்படுகிறது. இங்கு, மெஹருல்நிஷா, 21, மெஹக், 20, என்ற சகோதரியர் வசித்து வருகின்றனர்.இனிப்புகளின் மேல் தடவப்படும் வெள்ளி ஜரிகையை உருவாக்குவது தான் இவர்களது குடும்பத் தொழில். குடும்பத்தின் வறுமையை விரட்ட, வெள்ளி ஜரிகை வேலையை உதறிவிட்டு வெள்ளித் திரைக்குள் நுழைய வேண்டும் என ஆசைப்பட்டனர். ஆனால், ஊரில் பழமைவாதம் புரையோடி போயிருந்ததால், அந்த ஆசை நிறைவேறாது என புரிந்து கொண்டனர். அதற்கு மாற்றாக சமூக வலைதளம் வாயிலாக பிரபலமடைய நினைத்த சகோதரியருக்கு, 'இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்ஸ்' ஹீனா, ஜரர் ஆலம் இருவரும் உதவ முன்வந்தனர்.மொராதாபாத் அருகே உள்ள பாக்படாவில் அவர்கள் நடத்திய ஸ்டூடியோவுக்குள், பல கனவுகளுடன் காலடி எடுத்து வைத்தனர் சகோதரியர். 'இன்ஸ்டா'வில், 'ரீல்ஸ்' எனப்படும், குறும்படக் காட்சிகளை பதிவிடுவது பற்றி அவர்களிடம் கற்றுக் கொண்டவர்கள், தங்களுக்கென தனி ஐ.டி.,யை உருவாக்கி அதில், 'ரீல்ஸ்' வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தனர்.அதிக ரசிகர்களை ஈர்க்கும் நோக்கில், 'ரீல்ஸ்'களில் வன்சொற்களை பயன்படுத்துவது, ஆடை குறைப்பு காட்சிகள் ஆகியவற்றையும் அரங்கேற்றி இருந்தனர். இந்த முயற்சியால், 5 லட்சம் பேர் சகோதரியரை இன்ஸ்டாவில் பின்தொடர்ந்தனர்.அதே சமயம் முகம் சுளிக்க வைக்கும் ஆபாச 'ரீல்ஸ்'களை பார்த்த ஊர் மக்கள், சகோதரியரை கைது செய்யக்கோரி போலீசில் புகார் அளித்தனர்.அதன் அடிப்படையில் இரு சகோதரியரையும், அவர்களுக்கு உதவிய, 'இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்'களையும் கைது செய்த போலீசார், ஜாமினில் விடுவித்துள்ளனர். தற்போது, 'ரீல்ஸ்' வெளியிடுவதில் மெஹக்கும், மெஹருல்நிஷாவும் அடக்கி வாசித்து வருகின்றனர்.