| ADDED : ஜன 01, 2024 03:30 AM
புதுடில்லி : அரபிக்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில், வணிகக் கப்பல் மீது சமீபத்தில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, அப்பகுதிகளில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ய, போர் கப்பல்களை, நம் கடற்படை நிலைநிறுத்தி உள்ளது.அரபிக்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதி களில், சமீப காலமாக வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடக்கும் நிலையில், ஹவுதி படையினர் இத்தாக்குதல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், அரபிக்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில், கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில், நம் கடற்படை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.அதன்படி, இந்தப் பகுதிகளில், எதிரிகளை தாக்கி அழிக்கக்கூடிய நான்கு கப்பல்கள் மற்றும் ஒரு போர் கப்பலை நம் கடற்படை நிலைநிறுத்தி உள்ளது. மேலும், வானில் நீண்ட துாரம் ரோந்து பணியில் ஈடுபட, பி - 8ஐ விமானமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இது தவிர, அரபிக்கடலில் கண்காணிப்புக்காக, விமானம் போல் இருக்கும், 'பிரிடேட்டர் ட்ரோன்' அனுப்பப்பட்டு உள்ளது. கூடுதலாக, கடல்சார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில், ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.