| ADDED : செப் 23, 2025 12:40 PM
பெங்களூரு: பிரதமர் இல்லம் அமைந்துள்ள சாலையில் கூட பள்ளங்கள் உள்ளன என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறி உள்ளார். பெங்களூரு மாநகரில் சாலைகளில் காணப்படும் பள்ளங்கள், அம்மாநில அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல தொழில் அதிபர்கள், தொழில்துறை நிறுவன பணியாளர்கள், பொதுமக்கள் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.கடுமையான விமர்சனங்கள் எழவே, பெங்களூருவில் சாலை பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இந் நிலையில், பிரதமர் இல்லம் அமைந்துள்ள சாலையில் கூட பள்ளங்கள் உள்ளன என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறி உள்ளார். அவர் மேலும் கூறியதாவது; நேற்று நான் டில்லியில் இருந்தேன். பிரதமர் இல்லம் சாலையில் எத்தனை பள்ளங்கள் உள்ளன என்பதை ஊடகங்கள் கவனிக்க வேண்டும்.மோசமான சாலைகள் என்பது நாடு தழுவிய பிரச்னை. நாட்டின் எல்லா இடங்களிலும் பள்ளங்கள் உள்ளன. நீங்கள் விரும்பினால் நானும் அதை காட்டுகிறேன். இந்த பிரச்னைகள் அனைத்து இடங்களிலும் உள்ளன என்பதை பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். அவற்றை மூட நாம் நமது கடமையைச் செய்ய வேண்டும். கர்நாடகாவில் மட்டுமே இதுபோல் இருப்பதாக ஊடங்கள் காட்டுகின்றன. பாஜ அரசு சிறப்பாக செயல்பட்டு இருந்தால் சாலைகள் ஏன் இப்படி பள்ளமாக இருக்கும்.இவ்வாறு டி.கே. சிவகுமார் கூறினார்.