புதுடில்லி : இந்தியாவில், ஏழ்மையில் உள்ளவர்கள் எண்ணிக்கை, 5 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாகவும், நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் வறுமை வேகமாக குறைந்து வருவதாகவும், பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் ஏழ்மை நிலவரம் குறித்த புள்ளிவிபர அறிக்கையை, கடந்த 2023ம் ஆண்டுடன் ஒப்பிட்டு, எஸ்.பி.ஐ., 2024ல் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்ப தாவது:
வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் எண்ணிக்கை, 4 -- 4.50 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதுவே, ஏழ்மையிலும் ஏழ்மை என்பது மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது.
கடந்த 2011 - 12ல், கிராமப்புற வறுமை விகிதம் 25.70 சதவீதமாக இருந்தது; இது, 2022 - 23ல் 7.20 சதவீதமாக குறைந்தது; 2023 - 24ல் 4.86 சதவீதமாக குறைந்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.அதே நேரம், 2023 - 24ல் நகர்ப்புற வறுமை விகிதம் 4.09 சதவீத மாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு, 4.60 சதவீதமாக இருந்தது. கிராமப்புறங்களில், பணம் செலவிடும் பழக்கம் அதிகரித்து இருப்பது வறுமை குறைப்புக்கு வழிவகுத்துள்ளது.மேலும், அரசு நலத்திட்ட உதவிகள் அதிகரித்து இருப்பதும், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்படுவதாலும் கிராமப்புறங்களில் வாழ்க்கை தரம் வெகுவாக உயர்ந்துள்ளது.நகர்ப்புற வறுமை விகிதம் இன்னும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏழைகள் எண்ணிக்கை சரிவில், நகரங்களைவிட கிராமங்கள் வேகமாக முன்னேற்றம் கண்டுஉள்ளன. கிராமம் - நகரம் இடையே சமநிலையற்ற தன்மை குறைந்து வருவதும்; மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதும், ஏழ்மை பெருமளவு குறைந்து, நாட்டின் முன்னேற்றத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.நாட்டின் ஏழ்மையை கணக்கிட, கடந்த 2011 - 12ம் நிதி ஆண்டில் கையாளப்பட்ட நடைமுறையின்படி, தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் புள்ளிவிபரங்கள் உதவியுடன் தற்போதைய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த 2021 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பணிகள் நிறைவடைந்ததும், இதில் சிறிய மாறுதல்கள் இருக்கக்கூடும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், 23 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.- பிரதமர் மோடிஏழ்மை நிலைஆண்டு நகரம் கிராமம் (%)2011-12 13.70 25.702022-23 4.60 7.202023-24 4.09 4.86