பிரதமர் மோடிக்கு அதிகாரம் பொருட்டல்ல; மக்கள் சேவையை பாராட்டிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
தோஹா: 'பிரதமர் மோடிக்கு அதிகாரம் என்பது ஒரு பொருட்டல்ல. நாட்டிற்கு சேவை செய்வதில் அவரது அணுகுமுறையிலிருந்து நாங்கள் உத்வேகம் பெறுகிறோம்' என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் பாராட்டி உள்ளார்.கத்தார் சென்றுள்ள மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், அங்கு யுபிஐ சேவையை தொடங்கி வைத்தார். அவர் அந்நாட்டில் உள்ள உயர் நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து, தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து, கத்தாரில் நிருபர்களிடம் பியூஸ் கோயல் கூறியதாவது: நாட்டு மக்களுக்கு சேவை செய்வதையே பிரதமர் மோடி நோக்கமாக கொண்டு உள்ளார். அவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக தேசத்திற்காக சேவை செய்துள்ளார். மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். அவருக்கு அதிகாரம் என்பது ஒரு பொருட்டல்ல. நாட்டிற்கு சேவை செய்வதில் அவரது அணுகுமுறையிலிருந்து நாங்கள் உத்வேகம் பெறுகிறோம். இன்று, 140 கோடி இந்தியர்கள் மோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பொது சேவையில் 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடியை நான் வாழ்த்துகிறேன். அவரது தலைமையின் கீழ், நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சியைக் கண்டு வருகிறது.பீஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் என்பது உறுதி. கத்தார்-இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேம்பட்டு வருகின்றன. இது, வர்த்தகத்திலும் ஒரு மைல்கல்லாக இருக்கும். கத்தாருடன் மிகப்பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளோம். இந்தியா உலகின் வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகும். உலகளாவியமோதல் போக்கு, இருந்தபோதிலும், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்திய ஏற்றுமதிகள் 4-5% உயர்ந்துள்ளன. இது இந்தியா உற்பத்தி துறையில் முக்கியமான ஒன்றாக வளர்ச்சி அடைந்து வருவதை எடுத்துரைக்கிறது. இவ்வாறு பியூஸ் கோயல் கூறினார்.