பெமல் வேலைவாய்ப்பில் முன்னுரிமை தாய்மொழி கூட்டமைப்பு அழைப்பு
தங்கவயல்: ''பெமல் தொழிற்சாலையில் கர்நாடக மாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். உள்ளூர் தொழிலாளர்களை வஞ்சிக்கக் கூடாது. இதுகுறித்து முதல்வர் சித்தராமையா முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலையிடுமாறு வேண்டுகிறோம்,'' என, தாய் மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் தெரிவித்தார்.பெமல் ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நிரந்தரம் கோரி, நேற்று 7வது நாளாக நடந்த போராட்டத்தில் அவர் கூறியதாவது:தங்கச் சுரங்க தொழிலாளர் வாரிசுகளுக்காக 1964ல் உருவானது பெமல். இங்கு வட மாநிலத்தினருக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படுகிறது.கர்நாடகாவில் தமிழர்கள், கன்னடர்கள் ஒருங்கிணைந்து வாழும் தங்கவயலில் தமிழர் - - கன்னடருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் உழைப்பைப் பெற்று அவர்களை வஞ்சிக்கக் கூடாது.இவர்கள் பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். வயது முதிர்ச்சியில் எந்த ஒரு சலுகையும் இல்லாமல் வெறுங்கையுடன் வெளியேற்றப்படுகின்றனர். இது கொடுமையானது.இவர்களின் நியாயமான கோரிக்கைகளை, நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். இம்மாநில தமிழர் - கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலையிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.