மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்
இம்பால், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு, சட்டசபை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் இடஒதுக்கீடு தொடர்பாக மெய்டி மற்றும் கூகி சமூகத்தினருக்கு இடையே 2023 மே மாதத்தில் மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறி ஒன்றரை ஆண்டுகளாக நீடித்தது. கட்டுக்குள் வந்தது
பாலியல் வன்கொடுமை, துப்பாக்கிச் சூடு, வீடுகள் எரிப்பு என பல்வேறு சம்பவங்களால், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய, மாநில அரசின் அதிரடி நடவடிக்கைகளால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிலைமை கட்டுக்குள் வந்தது. இருப்பினும், ஆயுதமேந்திய போராளிகள் நடத்தி வரும் தாக்குதல்களால், அவ்வப்போது ஒரு சில வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வன்முறை சம்பவங்களுக்கு பொறுப்பேற்று, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் பைரேன் சிங் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சிலரும், இது தொடர்பாக கட்சி மேலிடத்தில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்த சூழலில், முதல்வர் பதவியை கடந்த 9ம் தேதி பைரேன் சிங் ராஜினாமா செய்தார். புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக, மாநில பா.ஜ., பொறுப்பாளர் சம்பித் பத்ரா, அக்கட்சி நிர்வாகிகளுடன் கடந்த சில நாட்களாக பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி வந்தார். இதில், எந்த முடிவும் எட்டப்படவில்லை. தடைபட்டது
இதற்கிடையே, அரசியல் சாசன விதிகளின்படி, ஒரு சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த அடுத்த ஆறு மாதத்திற்குள் மீண்டும் சட்டசபை கூட்டப்பட வேண்டும். மணிப்பூரில், கடைசி சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஆண்டு, ஆக., 12ல் நடந்தது. மீண்டும் கடந்த 10ம் தேதி சட்டசபையை கூட்ட முடிவெடுக்கப்பட்ட நிலையில், பைரேன் சிங் ராஜினாமாவால் அது தடைபட்டது. இந்நிலையில், சட்டசபை கூட்டுவதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து, மணிப்பூரில் நேற்று மாலை முதல் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு, சட்டசபையின் செயல்பாடுகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. கவர்னர் அளித்த பரிந்துரையை ஏற்று, ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த முடிவை எடுத்துள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மணிப்பூர் சட்டசபையின் பதவிக்காலம், 2027 மார்ச்சுடன் முடிவடைய உள்ள நிலையில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.