| ADDED : பிப் 12, 2024 06:27 AM
மைசூரு: ''மத்தியில் முந்தைய அரசுகள், கூட்டுறவு துறையை அழிக்க முயற்சித்தன. பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா வருகைக்கு பின், கூட்டுறவு துறை மீண்டு வருகிறது,'' என ம.ஜ.த., - எம்.எல்.ஏ., - ஜி.டி.தேவகவுடா தெரிவித்தார்.மைசூரில் நேற்று முன்தினம் நடந்த அகில இந்திய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கூட்டத்தை, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., - ஜி.டி.தேவகவுடா துவக்கி வைத்தார்.இதில் அவர் பேசியதாவது:மத்திய அரசில் முதன் முறையாக கூட்டுறவு துறை கணக்கை துவக்கிய பெருமை, பிரதமர் நரேந்திர மோடியை சாரும். இத்துறையின் முதலாவது அமைச்சராக அமித் ஷா செயல்படுகிறார். அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் டிஜிட்டல் மயமாக்குவதுடன், பல திட்டங்களை செயல்படுத்தி, கூட்டுறவு துறையின் விரிவான வளர்ச்சிக்காக உழைத்து வருகிறார்.கட்சி சார்பற்ற, மதச்சார்பற்ற, சமத்துவம் என்ற கொள்கையில் துறை முன்னேறி வருகிறது. விவசாய துறைக்கும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் கூட்டுறவு சங்கங்களின் பங்கு முக்கியமானது. சங்க உறுப்பினர்கள், அலுவலர்கள் நேர்மையாக பணி செய்ய வேண்டும்.நான், சித்தராமையாவை 36,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்த போது, என்னிடம் பணம் இல்லை. கூட்டுறவு சங்கமும், மக்களும் என்னை வெற்றி பெற வைத்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.