வயநாடு, கேரளாவில், வயநாடு லோக்சபா இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கிய காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா, “அரசியல் சாசன மதிப்புகளை பா.ஜ., குறைத்து மதிப்பிடுகிறது,” என, குற்றஞ்சாட்டினார். இடைத்தேர்தல்
கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி யில், காங்கிரஸ் சார்பில் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா போட்டியிடுகிறார். இங்கு, வரும் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.இதையடுத்து, தன் தேர்தல் பிரசாரத்தை பிரியங்கா நேற்று துவக்கினார். வயநாடு தொகுதியின் மீனங்காடியில் நடந்த ரோடு ஷோவில் பங்கேற்ற பின், அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய பிரியங்கா, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு மக்களிடையே அச்சத்தையும், கோபத்தையும், துயரத்தையும் பரப்பி வருகிறது. சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.மணிப்பூரில் நடந்த தாக்குதல்களைப் பார்த்திருக்கிறீர்கள். இவை அனைத்தும் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன. இரவு பகல் பாராமல் உழைக்கும் விவசாயிகள் மீது பா.ஜ., அரசுக்கு இரக்கம் இல்லை.பழங்குடி மக்களைப் பற்றிய புரிதலும் இல்லை. அவர்களின் நிலங்கள் பணக்காரர்களுக்காக பறிக்கப்படுகின்றன. மத்திய அரசு வகுக்கும் கொள்கைகள் சாமானிய மக்களுக்கு சாதகமாக இல்லை. அவை அனைத்தும் ஆட்சியாளர்களின் பணக்கார நண்பர்களுக்காகவே இயற்றப்படுகின்றன. போராட்டம்
காங்கிரஸ் நடத்தும் மிகப்பெரிய போரில் நீங்கள் எல்லாம் முக்கிய வீரர்கள். நம் அரசியலமைப்பின் மதிப்புகள் பா.ஜ., அரசால் நசுக்கப்படுகின்றன. அதை மீட்டெடுக்க நாங்கள் போராடுகிறோம். நம் ஜனநாயகம் மற்றும் சமத்துவத்திற்காக இந்த போர் நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.