மே.வங்க சட்டசபையில் போராட்டம் 6 பா.ஜ., உறுப்பினர்கள் சஸ்பெண்ட்
கோல்கட்டா,மேற்கு வங்க சட்டசபையில் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உட்பட பா.ஜ., -- எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேரை 'சஸ்பெண்ட்' செய்து சபாநாயகர் பீமன் பானர்ஜி உத்தரவிட்டார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி பகுதியில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து, அங்குள்ள பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பலரது நிலங்களை அபகரித்ததாகவும் சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில் கடந்த வாரம், ஷேக் ஷாஜகானை உடனே கைது செய்யக்கோரி, பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஷேக் ஷாஜகான் தலைமறைவாக உள்ள நிலையில் அவரையும், அவரது கூட்டாளிகளையும் கைது செய்யும்படி உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம், கடந்த 9ம் தேதி வன்முறையாக மாறியது.இந்த விவகாரம், நேற்று மேற்கு வங்க சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது.நேற்று சபையில் கேள்வி நேரம் துவங்கியபோது, சந்தேஷ்காலி மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்ற வாசகம் எழுதிய சட்டைகளை அணிந்தபடி பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், திரிணமுல் காங்., அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதையடுத்து, சபையின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ., சோபன்தேப் சாட்டர்ஜி, இடைநீக்க தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதை ஏற்று, எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி உட்பட ஆறு பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் பீமன் பானர்ஜி உத்தரவிட்டார்.இதற்கிடையே, சந்தேஷ்காலி பகுதிக்கு நேற்று சென்ற கவர்னர் அனந்த போஸ், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார்.